செய்திகள்

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் 44 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

சேலம், ஆக.6–

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

இந்நிலையில் காவிரி ஆற்றங்கரையையொட்டிய கிராமங்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒக்கேனக்கலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணை கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284.80 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக கேரள மாநிலம் வயநாடு பகுதி விளங்குகிறது. தற்போது வயநாடு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுத்திருப்பதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கபினி அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

இதனால் கபினி அணை நேற்று முன்தினம் 2,280 அடியை எட்டியது. அணை நிரம்ப இன்னும் 4.80 அடி பாக்கி இருந்த நிலையில், அணை நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டனர்.

கபிலர் ஆற்றில் கரை புரண்ட வெள்ளம்

அதனால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கபிலா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதலே அணைக்கு நீரவரத்து மேலும் அதிகரித்தது. அதாவது வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 2,282.00 அடியாக உள்ளது. அணை முழுமையாக நிரம்ப இன்னும் 2.80 அடியே பாக்கி இருக்கிறது. நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அதாவது அணையில் இருந்து நேற்று வினாடிக்கு கபினியிலிருந்து 40 ஆயிரம் கன அடி நீர் 4 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டு இருந்தது. இதனால் கபிலா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சரகூரு, நஞ்சன்கூடு, சுத்தூர், டி.நரசிப்புரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதிகள் விளங்குகின்றன. தற்போது குடகு மற்றும் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது.

இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,084 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4,713 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம்

நேற்று (புதன்கிழமை) மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.1 அடியாக இருந்தது. வினாடிக்கு 4000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 44,713 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடி தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணையை வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *