செய்திகள் நாடும் நடப்பும்

கர்நாடகா தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எதிரொலிக்குமா?


ஆர். முத்துக்குமார்


கர்நாடகத்தில் மிக பரபரப்பாக நடந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்து இன்று மக்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்ய சட்டமன்றத் தேர்தலில் இம்முறை வாக்காளர்கள் புதிய எழுச்சியுடன் வாக்களித்து வருகிறார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு தென் இந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே ஆட்சியில் இருந்ததை அறிவோம்.

இம்முறை தோற்று விட்டால் அதன் தாக்கம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும். இதைப் புரிந்து கொண்ட பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக பிரச்சாரம் செய்து வந்ததை கண்டோம்.

பிரதமர் மோடியும் மிகத் தீவிரமாக கிட்டத்தட்ட வீதிவீதியாகவே பெங்களூருவில் பிரச்சாரம் செய்துள்ளார். சென்ற முறை நகர் பகுதியான பெங்களூரில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் படுதோல்வியை பாரதீய ஜனதா சந்தித்து இருந்ததை மாற்றி அமைக்கவே அப்படிப்பட்ட தீவிர பிரச்சாரத்தை மோடி மேற்கொண்டு இருந்தார்.

மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. பா.ஜ.க. இதுவரை அறுதிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சிக்கு வந்தது இல்லை. 2008ல் 110 இடங்களில் வென்றதால் சற்றே பலவீனமான அரசாகவே பாஜக அரசு இருந்தது. எடியூரப்பா, சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டர் என 3 முதல்வர்கள் மாறினர். 2018ல் 104 இடங்களில் வென்ற பாஜக, ஓராண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. சில அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும் குழப்பம் குறையவில்லை. எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என முதல்வர்கள் மாறினர்.

கூடவே பசவராஜ் பொம்மையின் ஆட்சியில் ஊழல் மலிந்து இருப்பதாக எழுந்த புகார்களைப் பெரும் அஸ்திரமாகக் கைக்கொண்ட காங்கிரஸ் 40% கமிஷன் அரசு என்னும் பிரச்சாரத்தை ஆவேசத்துடன் இந்தத் தேர்தலில் முன்னெடுத்தது. நந்தினி பால் விற்பனையை நசுக்க பாஜக முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டையும் காங்கிரஸ் நன்றாக பயன்படுத்திக் கொண்டது.

பிரச்சாரத்துக்கு வந்திருந்தபோது நந்தினி ஐஸ்கிரீமைச் சுவைத்த ராகுல், ‘இது தான் சிறந்தது’ என்று சிலாகித்தார். பா.ஜ.க.விலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மண் சர்வாடி ஆகிய பெருந்தலைகள் காங்கிரசுக்குத் தாவியது பாஜகவை அதிர வைத்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தேசியப் பிரச்சினைகளை முன்வைத்தே பாஜக தேர்தல்‌ பிரச்சாரம் செய்தது. சித்தாந்த ரீதியாகத்‌ தாங்கள்‌ விமர்சிக்கும்‌ ‘இலவச’ வாக்குறுதிகளை வழங்கவும் அக்கட்சி தயங்கவில்லை.

அடுத்த ஆண்டு இதே நேரத்தில் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்! அதற்காக பாரதீய ஜனதா மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். கர்நாடகாவில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இலவசங்கள், மாதாந்திர பணம் போன்ற வாக்குறுதிகள் தேசிய அரசியலுக்கு பயன்படுத்தப்படலாம்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்தது. அதில் உண்மை இருக்க வாய்ப்பும் இருக்கிறது.

தொடர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சி என்பதால் anti incumbency அதாவது ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பலை உச்சத்தில் இம்மாநிலத்தில் நிலவுவதும் உண்மையே!

இந்நிலையை சமாளிக்கவே இலவசங்கள் பட்டியல் வெளிவந்துள்ளது என்பதை சாமானிய வாக்காளர்கள் அறிவார்கள். ஆனால் அப்படிப்பட்ட இலவசங்களை விரும்புவதும் அதற்காக வாக்களித்து விடுவதும் தொடர்கிறது அல்லவா?

இதே பாணியில் மத்தியில் ஆட்சியை பிடிக்க மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி தயக்கம் காட்டாது!

கர்நாடக அரசியல் களத்தில் ஆன்மீக மடங்களுக்குக் கணிசமான செல்வாக்கு உண்டு. லிங்காயத்து சமூகத்தினரின் ஆன்மீக மடங்களில் பாஜகவுக்குச் செல்வாக்கு அதிகம். குருபா சமூகத்தினரின் ஆன்மீக மடங்களில் காங்கிரசுக்குச் செல்வாக்கு உண்டு.

4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பட்டியல் சாதியினர், பழங்குடிகளுக்கு பலன் அளிக்கும் என்கிறது பாஜக. லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தினருக்குத் தலா 2% இடஒதுக்கீடு கிடைக்கும் என்கிறது. ஆனால் 15% க்கும் அதிகமான இடஒதுக்கீடு கோரும் இந்த சமூகத்தினர், 2% இடஒதுக்கீட்டால் திருப்தி அடைந்து விட மாட்டார்கள் என காங்கிரஸ் வாதிடுகிறது.

கர்நாடகத்தின் மக்கள் தொகையில் 13% முஸ்லிம்கள் என்பதை மனதில் வைத்து முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்து அதை 6% ஆக உயர்த்தப் போவதாகவும் காங்கிரஸ் கூறுகிறது.இது காங்கிரசுக்கு சாதகமான அம்சம்.

காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையாவா, சிவக்குமாரா என்பதில் தெளிவில்லை. மறுபுறம் பாஜகவைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை .அதை விட மோடியின் முகம் தான் பிரதானம். அதற்கு ஏற்ப பிரமாண்டமான பிரச்சாரக் கூட்டங்கள், பல கி.மீ. தொலைவு ரோடு ஷோ என ஓடி ஓடி உழைத்திருக்கிறார் மோடி. ஆனால் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கும்போது பிரதமர் கர்நாடகத்தில் ரோடு ஷோ செய்ததாக மல்லிகார்ஜூன கார்கே முதல் அசாவுதீன் ஓவைஸி வரை பலர் கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். அத்துடன் பிரதமரின் அந்தப் பயணத்தால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.

கர்நாடக மாநிலத்தில் நிலவும் பல்வேறு பொருளாதார சிக்கல்கள் சாமானியனுக்கு பலவித சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. எல்லாவித வளர்ச்சிகளும் பெங்களூரிலும் ஒரு சில நகர் பகுதிகளிலும் மட்டுமே இருப்பதை மறந்து விடக்கூடாது.

ஆக கள நிலவரம் பாரதீய ஜனதா அதீத முழு பலத்துடன் வென்று ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற நிலையும் நிலவுகிறது. இது பல ஆண்டுகளாக கர்நாடகாவில் அரசியல் மேடையில் வெற்றி உலா வந்து கொண்டிருக்கும் காங்கிரசுக்கும் இம்முறை மக்கள் ஆதரவு பெற வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கிறது.

ஆக இன்றைய தேர்தலின் முடிவு நாடு தழுவிய மக்களின் கருத்துக் கணிப்புக்கு இணையானது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *