5 வயது சிறுவன் உள்பட 7 பேர் பலி
பெங்களூரு, ஜூலை 8–
கர்நாடகாவில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த மாதத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரியவர்களுக்கு நிகராக குழந்தைகளையும் டெங்கு தாக்கி வருகிறது. திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்ணில் எரிச்சல், மூட்டு வலி, வாந்தி, குமட்டல், உடலில் வீக்கம், காய்ச்சல் ஆரம்பித்த நான்கு நாட்களில் உடலில் தடுப்புகள் ஏற்படுவது அறிகுறியாக உள்ளது.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, டெங்கு பரிசோதனை செய்து கொள்ளுமாறு பொது மக்களை, சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மாநிலம் முழுதும் 7,006 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கதக்கை சேர்ந்த 5 வயது சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைக்கு 600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், சுகாதார அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனையும் நடத்தி வருகிறார். மாநில தலைநகரான பெங்களூரில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், டெங்கு பாதிப்பு வேகமாக பரவுகிறது. பெங்களூரில் பாதிப்பு 2,000த்தை நெருங்கி உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரில் டெங்கு பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை, மாநகராட்சி, ஆஷா ஊழியர்கள் இணைந்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பெங்களூரு சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளை, பா.ஜ.க. எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் ஜனவரியில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த மாதம் தொற்று நோயாக மாறியுள்ளது. தினமும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. பா.ஜ.க., ஆட்சியில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இதுபோல டெங்கு பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும். இதற்கு 10 கோடி ரூபாய் செலவாகுமா. அந்த தொகையை மாநில காங்கிரஸ் அரசு விடுவிக்க வேண்டும்.
கொரோனா மாதிரி டெங்குவுக்கும் தனி வார்டு அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் ‘ஏசி’ அறையை விட்டு வெளியே வந்து வேலை செய்ய வேண்டும். நகரில் துாய்மை இல்லை. நகரை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவால் மக்கள் பயப்படுகின்றனர். ஆனால், அரசுக்கு எந்த பயமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.