செய்திகள்

கர்நாடகாவில் லாரி–ஜீப் மோதல்: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

பிரதமர் மோடி இரங்கல்; தலா ரூ.2 லட்சம் நிதி உதவி

பெங்களூரு, ஆக. 25–

கர்நாடக மாநிலம், சிரா அருகே இன்று அதி காலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் பலத்த காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினக் கூலித் தொழிலாளர்கள்

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் அனைவரும் தினக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் ஷாபூர்வாட் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் விபத்து குறித்து அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அந்த குடும்பங்களுக்கான நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *