கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
பெங்களூரு, ஜூன் 28–
கர்நாடகாவில் டெம்போ டிராவலர் வாகனத்தில் கோயிலுக்கு சென்று திரும்பியபோது, நின்ற லாரி மீது மோதியதில் குழந்தை உள்ளிட்ட 13 பேர் பலியானார்கள்.
கர்நாடக மாநில ஷிவமோக மாவட்டம் பத்ராவதி தாலுகா எம்மிஹாட்டி கிராமத்தை சேர்ந்தவர்வர்கள், கல்புருக்கி மாவட்டத்தில் உள்ள சிஞ்சொலி மாயம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பூனா – பெங்களுாரு தேசிய நெடுஞ்சாலையில் ஹாவேரி மாவட்டம் படகி தாலுகாவில் உள்ள குண்டேனஹள்ளி கிராஸ் பகுதியில் டெம்போ டிராவலர் வாகனம் சென்ற போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
13 பேர் பலி
இந்த விபத்தில் டெம்போ டிராவலர் வாகனம் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த குழந்தை உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார், தீயணைப்புத் துறையினர் வாகன இடிபாடுகளில் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.