செய்திகள்

கர்நாடகாவில் எடியூரப்பா மகனுக்கு எதிராக பாஜக முன்னாள் துணை முதல்வர் போட்டி

Makkal Kural Official

பெங்களூரு, ஏப். 13–

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா, பாஜகவுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா, மக்களவைத் தேர்தலில் தனக்கு ஷிமோகா தொகுதியிலும் தன் மகன் காந்தேஷுக்கு ஹாவேரி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், பாஜக மேலிடம் தொகுதி வழங்கவில்லை. ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கும், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் தொகுதிகளை வழங்கியது.

ஈஸ்வரப்பா கோபம்

இதனால் கோபமடைந்த ஈஸ்வரப்பா, ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து அமித் ஷா அவரிடம் பேசி, முடிவை கைவிடுமாறு கோரினார். அதற்கு ஈஸ்வரப்பா, ”கர்நாடக பாஜக எடியூரப்பா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது இளையமகன் விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தார். இதனை அமித் ஷா ஏற்க மறுத்தார்.

இதையடுத்து ஈஸ்வரப்பா நேற்று ஷிமோகாவில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:– இந்த தொகுதியில் பாஜக, காங்கிரஸை தோற்கடிப்பேன். எனக்கு எதிராக செயல்படும் எடியூரப்பாவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் தக்கபாடம் கற்பிப்பேன். எடியூரப்பா குடும்பத்திடம் இருந்து பாஜகவை விடுவிப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *