பெங்களூரு, ஜூன்21-
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடம் பேச வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
தாராள மனப்பான்மை
கர்நாடகம் என்று பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னடத்தாய் புவனேஸ்வரி தேவிக்கு 25 அடி உயர வெண்கல சிலை பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா சிலை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டி பேசியதாவது:-
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கன்னடம் பேச வேண்டும். கன்னடத்தில் பேசி வாழ்க்கையை வாழ வேண்டும். வேறு மொழி பேச மாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டும். கன்னடர்கள் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். அதனால் தான் பிற மொழியினரும் கன்னடம் கற்காமல் வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலை உள்ளது.
தாய் மொழியில்…
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இத்தகைய நிலை இல்லை. அவர்கள் எல்லாவற்றுக்கும் தங்களின் தாய்மொழியிலேயே பேசுகிறார்கள். அதனால் நாமும் நமது தாய் மொழியிலேயே பேச வேண்டும். இது நமக்கு பெருமையான தருணமாக இருக்க வேண்டும். இதில் தாழ்வு மனப்பான்மை தேவை இல்லை. கர்நாடகத்தில் கன்னட சூழலை உருவாக்குவது நமது அனைவரின் கடமை. கன்னடம் மீது அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது மொழி, நிலம், நமது மாநிலம் மீது மரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.