செய்திகள்

கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிய விஜய்

Makkal Kural Official

கரூர், அக். 7–

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்ப திவு செய்துள்ளனர்.இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

முதலில் கரூர் காந்திகிராமம் காந்திநகரைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். இதனை தனுஷ்குமாரின் உறவினர் ஒருவர் உறுதி செய்துள்ளார். அப்போது தனுஷின் சகோதரி ஹர்ஷினியிடம், “நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.” என்று கூறியுள்ளார். மேலும், இந்த சந்திப்பின்போது யாரும், புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், நேற்றிரவு ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலிடம் (டாஸ்மாக் ஊழியர்) விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார். கூட்ட நெரிசலில் இவரது மனைவி பிரியதர்ஷினி (35) மற்றும் மகள் தரணிகா (15) ஆகியோர் உயிரிழந்தனர். பிரியதர்ஷினி தவெக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலிடம் வீடியோ காலில் பேசிய விஜய், “இது ஈடு செய்ய முடியாது இழப்பு. நான் மிகவும் வருந்துகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். தவெக தேவையான உதவிகளைச் செய்யும்.” என்று கூறியுள்ளார்.

இரண்டு குடும்பங்களுடன் பேசும்போதும் விஜய் அதிக நேரம் மவுனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் ஒவ்வொருவரின் குடும்பத்தாருடனும் விஜய் வீடியோ காலில் பேசுவார் என்று தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் நேரில் சென்று தகவல் சொல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *