செய்திகள்

கரூரில் அம்மா சாலை பணிகள் 60% நிறைவு: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர், செப். 16

கரூர் நகரில் ரூ.21.12 கோடி மதிப்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் நகரத்தைச் சுற்றியுள்ள பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில், கரூர் ரெயில் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை எண்.7 வரை அமைக்கப்பட்டு வரும் அம்மா சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது கரூர் மாவட்டம். ஆயத்த ஆடை உற்பத்தியிலும், கொசுவலை உற்பத்தியிலும் உலக அளவில் முக்கிய வர்த்தக நகரமாக உருவெடுத்துள்ளது கரூர் நகரம்.

முதலமைச்சர் கரூர் மாவட்டத்திற்கு கேட்கின்ற திட்டங்களையெல்லாம் இல்லையென்று சொல்லாமல் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

அந்த வகையில், கரூர் நகரப்பகுதியில் 20 பிரதான சாலைகளை இணைத்து கரூர் ரெயில் நிலையம் முதல் பைபாஸ் சாலை வரை 2,600 மீட்டர் நீளத்திற்கு அம்மா சாலை அமைக்க முதலமைச்சர் ரூ.21.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தற்போது அம்மா சாலை அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிவுற்றுள்ளது, மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

போக்குவரத்து நெரிசல் குறையும்

கரூர் ரெயில் நிலையத்தில் தொடங்கும் அம்மா சாலையானது, கரூர் நகரத்திற்குள் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நடைபெறும் முக்கிய பகுதிகள் அடங்கிய சாலைகளை இணைத்து தேசிய நெடுஞ்சாலையினை எளிதாக அணுகும் விதமாக கரூர் -ஈரோடு ரெயில் பாதைக்கு இணையாக ரெயில் பாதையின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த சாலை முழுவதும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது, தற்போது கரூர் நகரம் சந்தித்து வரும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டோர் இத்திட்டத்திற்கு தங்களது நிலத்தினை தானமாக வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில், தனியாருக்கு சொந்தமான ரூ.10.37 கோடி மதிப்பிலான 14,185 ச.மீட்டர் பரப்பளவு இடங்கள் சாலைக்கென தானமாக பெறப்பட்டுள்ளது. விரைவில் அம்மா சாலை பணிகள் முடிவுற்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும். அம்மா சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது, ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி பலமடங்கு பெருகும் வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, கரூர் நகராட்சி கமிஷ்னர் சுதா, நகராட்சிப் பொறியாளர் நக்கீரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *