சிறுகதை

கருவறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

“அஸ்வினி அங்கெல்லாம் போகக்கூடாது. கீழ விழுந்துடுவ சரியா? இங்கதான் நீ விளையாடனும். அம்மா சொல்படி கேக்கணும் ஓகேவா? என்று அனிதா தன் மகள் அஸ்வினியை கூப்பிட்டாள்.

” அம்மா நான் அந்த ஊஞ்சல்ல விளையாடணும்” என்று அடம் பிடித்தாள் அஸ்வினி.

” இல்லம்மா ஊஞ்சல் அது ரிப்பேர்ல இருக்குன்னு சொல்றாங்க. அந்த ஊஞ்சல்ல நீ அட வேணாம் “என்று அஸ்வினியின் தலையை அனிதா தடவ

“சரி “என்று தலையாட்டிய அஸ்வினி சறுக்கு விளையாட்டில் போய் ஏறி சறுக்கினாள்.

அந்தப் பூங்காவில் இப்படி எண்ணற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அதை பார்த்து பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த மகிழ்ச்சியின் நிகழ்ச்சியில் அனிதாவும் சேர்ந்திருந்தாள். தன் மூன்று வயது மகள் அஸ்வினி அந்தப் பூங்காவில் ஒரு பூவை போல விளையாடிக் கொண்டிருந்தாள். மகள் விளையாடுவதைப் பார்த்து, அவள் மனதெல்லாம் பூரிப்பு ஏற்பட்டது. தன்மகள் தன் பிஞ்சுப் பாதங்களில் ஓடி ஆடுவதைப் பார்த்து அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் .இடையே கணவன் பரத் சில நிமிடங்கள் சில நேரங்களில் பேசியிருந்தான்

” பாப்பா என்ன செய்ற? “

“விளையாடுற”

பாத்து பத்திரம். கீழே ஏதும் விழுந்திட போறா? என்றான். பரத்தின் பேச்சில் கொஞ்சம் ஈரம் இருந்தது.

” சரிங்க நான் பாத்துக்குறேன். என்னப் பெத்த தாய்க்கு இல்லாத அக்கறையா?” என்று சலித்தபடியே கணவனின் போனைக் கட் செய்து விட்டு அஸ்வினியைத் தேடினாள். அந்தப் பிஞ்சுக் குழந்தை அந்தப் பூங்கா முழுவதும் ஓடித் திரிந்தது. ஓடித் திரிந்த அஸ்வினியைப் பார்த்து அந்தப் பூங்காவில் இருந்த பலரும் கூட உச்சக் கொட்டினார்கள். நல்ல அழகான பொண்ணா இருக்காளே ” என்று சொல்ல ” என் பொண்ணு தான் அவ பேரு அஸ்வினி ” என்று அவர்கள் கேட்காமலே ,பதில் சொன்னாள் ,

அனிதா. தன்னுடைய இரத்தம் தன்னுடைய சதை | தன்னுடைய அமுதம் குடித்து வளர்ந்த ஒரு உயிர் இப்படி பேசிக்கொண்டும் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்த்து அவளுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி. அந்தப் பூங்காவில் உள்ள அத்தனை விளையாட்டுகளும் விளையாடி விட்டு சற்று ஓய்ந்து இருந்தாள்

“அம்மா எனக்கு வேர்க்குது” என்று சொல்ல

தன்னுடைய புடவைத் தலைப்பை எடுத்து அஸ்வினியின் நெற்றி, கழுத்தில் ஒட்டியிருந்த வேர்வைத் துளிகளை எல்லாம் எடுத்தாள்.

” சரி வீட்டுக்கு போலாமா?” என்று அனிதா

“போகலாம்” என்று ஓடி ஆடி ஓய்ந்த குழந்தை அம்மா சொன்னதுக்கு ஒப்புக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓட ஆரம்பித்தது.ஓடியும் நடந்தும் கொண்டிருந்த அஸ்வினி பட்டென்று ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தாள்.

” ஐயோ என் புள்ள ” என்று பதறி அடித்து தன் படுக்கையறையிலிருந்து எழுந்தாள் அனிதா

“இதுவெல்லாம் நான் கண்ட கனவா ? அஸ்வினி என் மகள் இல்லையா? இப்போதுதான் சற்று முன் தான் என் மூன்று வயது குழந்தையுடன் அழகிய பூங்காவில் ஆடி பாடிக் கொண்டிருந்தேனே? அதற்குள் என்ன உண்மை . என் கனவு கலைந்து விட்டதே ?” என்று வருத்தப்பட்டாள் அனிதா.

பின்னிரவைத் தாண்டிய பொழுது விடியலை நோக்கிப் பயணப் பட்டுக் கொண்டிருந்தது .

அருகில் படுத்திருந்த கணவன் பரத் உஸ் உஸ் என்று மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான்.

நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைத்தபடியே லேசாகக் கண் மூடினாள் அனிதா. எப்போது தூங்கினான் என்று அவளுக்கே தெரியவில்லை.

காலையில் எழுந்து அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான் பரத் .

“என்ன அனிதா இன்னிக்கி ஹாஸ்பிடல் செக்கப் போகனும் ரெடி ஆயிட்டியா?” என்று பரத் சொல்ல

“இந்தா ” என்று சிறிது நேரத்தில் கிளம்பித் தயாராகி வந்தாள், அனிதா. இருவரும் நேராக அந்த குடும்ப நல மருத்துவர் மீனாவிடம் சென்றார்கள். அதுவும் பரத் அனிதாவிற்கு வேண்டப்பட்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த ஸ்கேன் , எக்ஸ்ரேக்களை உற்று உற்றுப் பார்த்தவர் அதை சற்று கீழே தள்ளி வைத்துவிட்டு அனிதாவையும் பரத்தையும் ஒரு சேரப் பார்த்தார் . சிறிது நேரம் அவரால் பேசவே முடியவில்லை.

“என்ன ஆச்சு?” என்று பரத் கேட்க

“இல்லை. இத எப்படி சொல்றதுன்னு தெரியல? என்று அனிதாவைப் பார்த்தார் மீனா.

” டாக்டர் சொல்லுங்க. எதா இருந்தாலும் என்ன ? என்று சொன்ன அனிதாவை பார்த்த அந்த மருத்துவர் வேறு வழியில்லை; சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு சொல்லவில்லை என்றால் இது என்றைக்கும் சொல்ல முடியாது என்று நினைத்து

“இந்த ரிப்போர்ட்டில்ல இருந்ததை மறுபடியும் மறுபடியும் வாசித்தார். அவ்வளவு குளிரூட்டப்பட்ட அறையிலும் டாக்டர் மீனாவிற்கு முத்து முத்தாக வேர்த்தது. தன் கையில் இருந்த கைக்குட்டையால் அதை ஒற்றி எடுத்து கொண்ட மீனா வேறு வழியில்லை; சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வாய் திறந்தார்.

” உங்க உடம்பு நல்லா தான் இருக்கு. உங்க உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா என்று இழுத்து சற்று இடைவெளி விட்டார் .

“ஆனால என்ன டாக்டர் சொல்லுங்க ? என்று பரத் கேட்க

அதை சொல்வதற்கு மிகவும் தயங்கிய மீனா வேறு வழியில்லை என்று சொல்லித் தான் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ” அதுல ஒன்னும் பிரச்சனை இல்ல;

ஆனா அனிதாவோட கர்ப்பப்பை ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு பலம் இல்ல. ரொம்ப பலவீனமா இருக்கு. உங்க கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருக்கிறதால அத ரிமூவ் பண்ணா தான் உங்களால உயிர் வாழ முடியும். இல்லன்னா உங்க உயிருக்கே கூட ஆபத்தா அது அமையலாம். யோசிச்சு முடிவு சொல்லுங்க ” என்று உள்ளறைக்குள் சென்று விட்டார் டாக்டர் மீனா.

வேறு வழியில்லை கர்ப்பப்பை எடுத்து ஆக வேண்டும் என்று நிலைக்குத் தள்ளப்பட்டாள் அனிதா. அன்று அந்த மருத்துவமனையில் கர்ப்பம் தரித்த கர்ப்பத்தில் பிறந்த எத்தனையோ குழந்தைகள் குவா…. குவா “என்று கத்திக்கொண்டு வெளியே வந்தன.

ஆனால் அனிதாவின் கருவறை அவள் உடம்பிலிருந்து நீக்கப்பட்டது. அனிதாவின் ஆசைகள் பின்னோக்கிச் சென்றன

” இங்கே வா.இப்படி உட்காரு அங்க போக கூடாது; அந்த ஊஞ்சல் சரியில்லை. இங்க வா அஸ்வினி ” என்று கைகொடுத்து, கைநீட்டித் தன் மகள் அஸ்வினியைக் கொஞ்சியது நினைவில் வர அனிதாவின் கண்கள் கலங்கின.

“இந்தா வாரேன்மா” என்ற அஸ்வினி அனிதாவின் கைகளுக்குள் வந்து சேர்ந்தாள். அனிதா தன் மகள் அஸ்வினியை நினைத்துக் கொண்டிருந்தபோது

அவளின் கருவறைக் கர்ப்பப் பை வெட்டித் தூக்கி எறியப்பட்டது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *