சிறுகதை

கரும்புத் தோட்டக்காரன் | ராஜா செல்லமுத்து

‘கருணாகரனுக்குள் அன்று சந்தோசம் துளிர்க்கவில்லை…

தைப் பொங்கலை நினைத்து கவலைப் பட்டான்.

நெடுந்நதூரம் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை, பொட்டல் காடுகளாய் புழுதி பரப்பிக் கிடந்தது நிலம். அவன் விழித்துப் பார்த்த போது விழிகளில் தூசி விழுந்து கருவிழிகளை உறுத்தியது. விழுந்த தூசியைக் கூடத் துடைக்காமல் தொலைதூரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். விழியில் விழுந்த தூசி கூட அவனை உறுத்தவில்லை. பொட்டலாய் அழிந்து போய்க் கிடக்கும் வயல்வெளிகளே அவன் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தது.

‘சர்சர்’ என வீசிய புழுதிக் காற்றில் எண்ணெய் தேய்க்காத அவன் தலை முடிகள் பரபரவெனப் பறந்தன. முகம் முழுவதும் புழுதி சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. விழிகளிலிருந்து விழும் கண்ணீர் நின்றாபடில்லை. வறண்டு போன பூமியில் கால் வைத்தான்.

பொதக்…பொதக்….. என்று கால்கள் மணலில் புதைய நடந்து கொண்டே இருந்தான். அவன் கண்களில் பழைய நினைவுகள் அவிழ்ந்து விழுந்தன.

‘கருணாகரா…கருணாகரா… தூரக்குரல் வந்த திசையை நோக்கிகத் திரும்பினான். ஆள் வந்தால் தெரியாத அளவிற்க வளர்ந்திருந்த கரும்புக் காட்டிற்குள்ளிருந்து கருணாகரன் ‘ஓ’வென எதிர்குரல் கொடுத்தான்.

‘என்ன பண்ற?’

உரம் வச்சிட்டு இருக்கேன்.

‘ம்ம் உனக்கு தான் இன்னைக்கு வாழ்க்கை போல’

‘ஏன் அப்பிடி சொல்ற? என்ற பதில் குரலை சந்திரனுக்குக் கொடுக்காமல் இல்லை.

உன்னுடைய தோட்டம் முழுசும் நல்லா வெளைஞ்சு நிக்குதே.

உழைப்புய்யா… எல்லாம் கடுமையான உழைப்பு…

நெத்தி வேர்வை சிந்தாம வெற்றி பெற முடியாதுப்பா…

‘எல்லாம் தான் நெத்தி வேர்வை, ரத்தம் சிந்துறான். ஆனா உனக்கு மாதிரி ஒரு விளைச்சல் இங்க யாருக்கும் இல்லையே… என்ற சந்திரன், கருணாகரனை நெருங்கி வந்துகொண்டே இருந்தான். அடிக்கும் காற்றுக்குத் தகுந்த மாதிரி கரும்புத் தோகையை அப்படியும் இப்படியுமாய் அசைத்துக் கொண்டேயிருந்தது.

‘சர்சர்ரென கரும்புத் தோட்ட வரப்புகளின் ஊடே ஓடிக் கொண்டிருந்தன கரும்பு வயல் குருவிகள்.

‘அப்ப இந்த பொங்கலுக்கு உங்களுக்கு நல்ல வருமானத் தானே’ என்ற சந்திரன், கரும்புத் தோட்டத்தினுள்ளே நுழைந்தான்.

தலையில் கட்டிய உருமாலோடு இனிப்பாய் வளர்ந்திருந்த கரும்புகளுக்கு உரம் வைத்துக் கொண்டிருந்தான் கருணாகரன்.

நல்ல நாட்டுக்கட்டை மாதிரி கரும்பெல்லாம் வெளைஞ்சு நிக்குது’ இந்த பொங்கலுக்கு நல்ல விலை கிடைக்கும் போல’.

ஆமா, நல்ல விளைச்சல் இருக்குல்ல. உழைப்புக்கு எற்ற மாதிரியான வருமானம் வந்து தானே ஆகணும்… அது நம்ம கை மேல வந்திருக்குல்ல என்ற கருணாகரன் குழந்தையைப் போலவே கரும்பைக் கட்டித் தழுவினான்.

‘உன்னோட கஷ்டமெல்லாம் தீர்ந்து போகுமுன்னு நினைக்கிறேன்’

‘ஆமா, சந்திரன் எவ்வளவு நாள் உழைப்பு, அதுக்கு பலன் வந்து தானே ஆகணும். என்றபடியே வேலை செய்து கொண்டிருந்தான் கருணாகரன்.

புழுதிக் காற்று பலமாக அடித்தது,

நினைவுகள் விழிகளில் வழியும் நீராய் நீர்த்துப் போய் நிகழ் காலத்தில் வந்து நின்றது.

பொட்டல் காடுகளாய் புழுதி பறக்கும் காடுகளைப் பார்த்தான்.

கருணாகரா… கருணாகரா அதே சந்திரன் அவனின் தோள் தட்டினான்.

நீர் வழியும் விழிகளோடு திரும்பினான் கருணாகரன்.

‘வா போகலாம்’

வாய் பேச முடியாமல் திணறினான் கருணாகரன்.

புயல், மழை, காற்று, வெயில் வெள்ளம் இதெல்லாம் நம்மோட கட்டுப்பாட்டுக்குள்ள இல்ல கருணாகரா. எல்லாம் இயற்கை இட்டு வச்சுருக்கிற நீதி, எல்லாம் போயிருச்சு. என்ன பண்ண? எப்பிடி வௌஞ்சு நின்ன கரும்புத் தோட்ட வயல்வெளி. இப்பிடி ஆகிப் போச்சு. ஊருக்கே கரும்பு குடுத்த உன்னோட வயலு இப்ப பொட்டல் காடா கெடக்கு, ஒரு புல் பூண்டு கூட முளைக்கல. இனி இந்த நிலத்த வெறிச்சுப் பார்த்து எந்த பிரயோசனமில்ல, வா போகலாம் என்று கருணாகரனை இழுத்தான் சந்திரன்.

எந்தவொரு வார்த்தையும் அவன் வாயிலிருந்து வந்து விழவே இல்லை.

ஊரின் எல்லையைத் தொட்ட இருவருக்கும் என்னவோ போலானது.

‘கருணாகரா போவமா?’

‘எங்க?’

ரேசன் கடையில கரும்பு தாராங்க’ வா, வாங்கிட்டு வரலாம்’ என்று சந்திரன் சொன்ன போது முன்னைவிட அதிகமாகவே கருணாகரன் கண்களுக்குள் கண்ணீர் சுரந்தது.

அது கண்ணீர் அல்ல அவன் நெஞ்சுறுதியில் பிறந்த நம்பிக்கை ஊற்று.

அதோடு புதிய நம்பிக்கையும் பிறந்தது.

ஓடினான் .

பொட்டல் காடாகக் கிடந்த தன்வயல்களில் புயல்மழையை காற்றை காலத்தை கடந்து வாழ்ந்து பிறரை வாழவைக்கும் புளியமரக் கொட்டைகளை விதைத்தான்.

கருணாகரன் உதடுகளில் இருந்து உறுதியான வார்த்தைகள் வெளிவந்தன:

‘‘ஊருக்கே கரும்பு குடுத்த என்னோட வயலு இப்ப பொட்டல் காடா கெடக்கு,

இதே என்வயல்களில் புளியந்தோப்பு உருவாகும் . நானும் வாழ்வேன்; என் ஊரும் வாழும். மாட்டேன் . உன்னோடு கரும்பு வாங்க நான் வரமாட்டேன்’’என்றான் கருணாகரன்.

அவன் வார்த்தைகளில் இருந்த உறுதி கண்டு சந்திரன் வெட்கிப்போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *