ஆர்.முத்துக்குமார்
அழிவை எதிர்ப்போர் சங்கம் ஆங்கிலத்தில் ExtinctionRebellion அமைப்பின் நான்கு அங்கத்தினர் அமெரிக்க ஓபன் அரை இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை கேகோ காப் மற்றும் செகியா நாட்டின் கரோலினா பரபரப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென புதை படிவ எரிபொருள்களை, Fossil Funel, பயன்படுத்தாதே, அதற்கு நிதி உதவிகளை நிறுத்துங்கள் என கூச்சல் போட மவுனமாக இருந்த அந்த ஸ்டேடியம் அதிர்ந்து நிலை தடுமாறி நிசப்தத்தில் உறைந்தது!
வீராங்கனைகள் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடும் வரை 6-–4, 1–-0 என்ற கட்டத்தில் கேகோ முன்னணியில் இருக்க பாதுகாப்பாக அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அந்தப் போராட்டக்காரர்களின் குரல் எண்ணெய் வளத்தை எதிர்த்தது என்பதற்காக ஏன் விளையாட்டுப் போட்டியை தடுக்க வேண்டும்?
இது போன்றே ஜூலை மாதத்தில் ஒரு ஸ்டேடியத்தில் விம்பிள்டன் போட்டியின் போது ஒரு சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர் விளையாடும் களப்பகுதியில் குதித்து ஆரஞ்சு நிற ‘கோல மாவு’ பொடியை தூவியபடி எரிவாயுவை தடை செய், நிதி உதவி செய்யும் வங்கிகளே உதவாதே என பிரிட்டன் அரசுக்கு அறிவுரை தந்தபடி கத்திக் கொண்டு இருந்தவரை காவலாளிகள் லாவகமாக அப்புறப்படுத்தினர்.
ஜூன் மாதத்தில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போதும் சிலர் இதேபோன்று ஆரஞ்சு கோல மாவை மைதானத்தின் வெளிவட்டத்தில் தூவி பெட்ரோல், டீசல் உபயோகத்தை தடை செய்ய கூச்சல் போட்டனர்.
இது விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்படும் தடையால் ரசிகர்களுக்கு எரிச்சல் தரலாம். ஆனால் அவர்களின் எச்சரிக்கை உலகெங்கும் அபாய சங்கை ஊதுவதை மறந்து விடக் கூடாது.
கடந்த 3 மாதங்களில் உலகின் பெரும் பகுதி மிக அதிக வெப்பத்தை சந்தித்து இருக்கிறது.
உலகெங்கும் தொழில் கூடங்களும் வாகனங்களும் உமிழும் கார்பன் அமிலம் உமிழ்வு குறைந்த பாடாக இல்லை அல்லவா? அதன் விளைவாக நமக்கு நாமே இயற்கையை நச்சுப்படுத்தி அதிக வெப்பத்தை சந்தித்து வருகிறோம்.
தொழில் புரட்சிக்கு முன் இருந்ததை விட தற்போது அதாவது 100 ஆண்டுகளில் புவி வெப்பம் 1.1 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்து விட்டது.
மொத்தத்தில் விளையாட்டு தடைகள், பொது இடங்களில் கிளர்ச்சியாளர்களின் கூச்சலை கண்டு எரிச்சல்படுவதை விட இனி வெப்ப உயர்வை குறைக்க நாம் வேர்வை சிந்த உழைத்தாக வேண்டிய கட்டம் வந்து விட்டது!
www.dimatecentral.org என்ற அமைப்பு இம்மாத துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உலக ஜனத்தொகையில் 48% பேர் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உச்ச வெப்பத்தை 3 நாட்களுக்கும் மேல் சந்தித்துள்ளனர். இந்த 3 மாத கணக்கீட்டை அதாவது உச்ச வெப்ப காலக் கட்டத்தை சிஎஸ்ஐ3 அதாவது CSI3 என்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தில் நம் நாட்டிலும் கடுமையான கோடைப் பருவம் நிலவியதை அறிவோம்.
உலக நாடுகளில் 202 நாடுகளில் சி எஸ்ஐ3 அல்லது அதற்கு மேலும் வெப்பமயம் காணப்பட்டிருக்கிறது, நம் நாட்டில் 11 மாநிலங்கள் இந்த வெப்பநிலையில் துவண்டு இருக்கிறது. அவை கேரளா, புதுச்சேரி, அந்தமான், மேகாலயா, கோவா, கர்நாடகா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து மற்றும் தமிழ்நாடு ஆகும்.
இதில் கேரளா, புதுச்சேரி, அந்தமானில் தான் அதிகபட்ச வெப்பம் அதிக நாட்களுக்கு தாக்கி இருக்கிறது.
கோவிட் ஊரடங்கு உக்ரைனில் போர் குளறுபடிகள், அமெரிக்க – சீன லடாய் காரணமாக உலகெங்கும் நிதி தட்டுப்பாடுகளால், பணவீக்கம், விலைவாசி உயர்வு என தவித்துக் கொண்டிருக்கையில்
வாகனங்களில் கரும்புகை வெளியேற்றத்தை பற்றிக் கவலைப்பட உலக தலைவர்களுக்கு நேரம் எது?
வெப்ப அதிகரிப்பால் ஏற்பட்டு வரும் பல சுகாதார கேடுகள் நமது உயிர் வாழும் நாட்களை குறைத்து வருவதை புரிந்து கொள்ள வேண்டும். விவசாய விளைச்சல்கள் பாதிப்படைய முக்கிய காரணங்கள் தேவைக்கு உரிய நேரத்தில் நீர் கிடைப்பது கிடையாது அல்லது வெள்ளப் பெருக்கால் நாசமாகி விடுவது. இவைகளின் பின்னணியில் பருவநிலை தடுமாற்றங்கள் இருப்பது சாமானியனுக்கும் புரிந்து கொள்ள முடிந்தது தான்.
வெப்ப நிலையால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது, காரணம் பனி உருகுவது. இதே வெப்ப நிலை தொடர்ந்தால் சுனாமியாய் அதீத மழை பொழிவும் வர கடல் நீர் மட்டம் அபாய எல்லைகளையும் விட அதிகரித்து விடும்.
முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை பொழிவை மறக்கவா முடியும்? மத்திய சென்னை பகுதிகளில் நீர் அளவு உயர்ந்து படகுகளின் உதவிகள் செய்யப்பட்ட தினங்களை மறக்கக்கூடாது! அப்படி ஒரு நிலை மீண்டும் வரும் அபாயத்தை பற்றி தான் எண்ணெய் உபயோகத்திற்கு எதிர்ப்பு குரல்கள்.
புதை படிவ எரிபொருள் என்பது நமது முன்னோர்களும் மரம் செடி தாவரங்களும் நுண்ணுயிர்களும் காலச்சக்கர ஓட்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக புதைந்திருக்கையில் பூமியின் உட்பகுதி வெப்பத்தால் கரியாகி இத்தருணத்தில் எரிபொருட்களாக அதாவது கச்சா எண்ணெய் கரியாக வெளியே எடுக்கப்பட்டு வருகிறது.
அதை உபயோகிக்கும் போது அதிகமாக வெளியேற்றப்படுவது கரிமப் புகை. அதில் அதிகமாக இருப்பது கார்பன் என்பதை நாம் விஞ்ஞான பூர்வமாக உணர்த்தும் முழு மனதோடு அதன் உபயோகத்தை குறைத்து விடத் தயாராகவில்லை.
அது சரி ஏன் விளையாட்டுப் போட்டிகளில் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது?
அமெரிக்க ஓபன், விம்பிள்டன் போட்டிகளின் விளம்பரதாரர்களின் முக்கிய பங்களிப்பு உலகப் புகழ் ஜே பி மோர்கன் சேஸ் நிதியகம் பிரிட்டனை சுற்றிய பகுதிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி எரிவாயு தொழில்கள் துவங்க உதவ இருக்கிறார்களாம். அதை அரசுகளும் உலக அமைப்புகளும் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த போராட்டங்கள்.
உண்மையில் எது சரி? போராட்டங்களா? போராட்டங்களில் ஈடுபடுவோரின் கோரிக்கைகளா? இந்த விவாதத்தின் பின்னணியில் புதைந்திருக்கும் மனிதனின் வரும் கால நலனையும் மறந்து விடக்கூடாது.
நாம் 7 தலைமுறைக்கு சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள். இனி அடுத்த 7 தலைமுறையும் நல்ல ஆரோக்கியமான வாழ்வையும் அனுபவிக்க உகந்த முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
ஒன்றை மறந்து விடக்கூடாது, 2050ல் தற்போது உலகெங்கும் இருக்கும் 3800 துறைமுகங்களில் பல செயல்படவே முடியாத அளவு கடல் நீர் மட்டம் உயர்ந்து இருக்குமாம்! அந்த 3800 துறைமுகங்களில் சென்னை துறைமுகமும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் சிஎஸ்ஐ – 3 நிலை பிரதேசங்களில் இதில் 80% துறைமுகங்கள் இருப்பது தான் உண்மை.
கடல் மட்டம் குறைய முக்கிய காரணங்களில் கப்பல் வெளியேற்றும் கரும்புகை சமாச்சாரமும் இருக்கிறது. உலக கரும்புகை வெளியேற்றத்தில் கப்பல்கள் வெளியேற்றும் கரும்புகை 3% ஆகும்.
மொத்தத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களை கையாளும் பிரபல மாபியா கும்பல் தங்கள் வருமானத்தில் அதிநவீன மருத்துவமனையை உருவாக்கி பல பேரின் உயிரை பாதுகாக்க முதலீடு செய்வதும் போதை அடிமைத் தனத்திலிருந்து தப்பிக்க மையங்கள் அமைப்பதையும் பாராட்டி கவுரவிப்பது போல் இன்றைய எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் சமாச்சாரங்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.
இதுவரை உலகம் எப்படியோ சார்ல்ஸ் டார்வின் கூறியது போல் ‘ வலிமை உள்ளது பிழைத்து வாழும் ‘ அதாவது Survival of the fittest என்ற தாரக மந்திரத்தை கொண்டு 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனித இனம் வரும் நூற்றாண்டுகளில் எப்படி தப்பி பிழைத்து வாழும் என்பதை காலம் தான் நமக்குப் புரிய வைக்கும். ஆனால் இது பற்றிய விவாதத்தை புரிய வைத்து வரும் சில நல்லவர்களின் குரல் ஒலிகள் தொடரத்தான் செய்யும். அனுமதிக்கவும் தயங்கக் கூடாது.