செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் ஆராய்ச்சிக்கு வல்லுனர் குழு நியமனம்

சென்னை, மே.29-

கருப்பு பூஞ்சை நோய் ஆராய்ச்சிக்கு வல்லுனர் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மியூகோமைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய், தொற்றை ஏற்படுத்தும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோயை தடுப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கவும், அதுதொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு அரசுக்கு தகவல்களை புதுப்பிக்கவும் மருத்துவ வல்லுனர்களை கொண்ட பணிக்குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

11 பேர் உறுப்பினர்கள்

அந்த குழுவின் தலைவராக மருத்துவ கல்வி இயக்குனர் செயல்படுவார். சென்னை கண், மூக்கு, தொண்டை (இ.என்.டி.) ஆராய்ச்சி அறக்கட்டளையின் டாக்டர் மோகன் காமேஷ்வர், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பாபு மனோகர், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்புமருந்துகள் இயக்குனர், சென்னை மருத்துவக் கல்லூரி இ.என்.டி. துறைத் தலைவர், மைக்ரோபயாலஜி துறைத் தலைவர் உள்ளிட்ட 11 பேர் உறுப்பினர்களாகவும், சென்னை அரசு கண் மருத்துவமனை, கண் மருத்துவப் பிரிவு இயக்குனர் உறுப்பினர் செயலாளராகவும் செயல்படுவார்.

இந்த வல்லுனர் குழு, தேவைப்படும் நேரத்தில் கலந்தாலோசனை செய்து அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பூஞ்சை மருத்துவ வல்லுனர் குழு கூட்டம் நடைபெற்றது. கருப்புப் பூஞ்சை நோய் தடுப்பு குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஸ்டீராய்டு சிகிச்சை காரணம்

பின்னர், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, டாக்டர் மோகன் காமேஷ்வர் ஆகியோர் அளித்த பேட்டி வருமாறு:-

கருப்பு பூஞ்சை நோய், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றிடும் நோய் அல்ல. இது கொரோனாவுக்கு முன்பே இருக்கும் நோய். முன்பு ஒரு ஆண்டுக்கு 50 பேருக்கு மட்டும் இந்த நோய் வந்தது.

கொரோனா மருத்துவத்தில் அளிக்கப்படும் ஸ்டீராய்டால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும், 2-வது அலையில் உருமாறியுள்ள கொரோனாவுக்கும் கருப்பு பூஞ்சை பரவுவதற்கும் என்ன தொடர்பு என்பதும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்.

கருப்பு பூஞ்சை தாக்குவதற்கு, நீண்டநாள் ஸ்டீராய்டு சிகிச்சை, ஆன்டிபயாடிக் மருந்தை அதிக காலம் உட்கொள்வது, நோய் எதிர்ப்புசக்தி குறைவது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காதது போன்ற சில காரணங்கள் உள்ளன.

ஆனாலும் நோய் அறிகுறி தெரிந்ததும் உடனடியாக இ.என்.டி. டாக்டரை நாடினால் ஒரே சோதனையில் அதை எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள். கண், மூக்கு பகுதியில் வலியுடன் இந்த நோய் தொடங்கும். மூக்கு அடைப்பது போல் இருக்கும்.

அதன் பின்னர் கண்கள் வீங்குவது, மூக்கில் நீர், கருப்பு நிற திரவம், ரத்தம் கலந்த நீர் வடிவது போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளையைத் தாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *