ஆர்.முத்துக்குமார்
பல ஜனநாயக நாடுகளில் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் நேரத்தில் நிதி தருவது வாடிக்கை. வெளிப்படைத் தன்மையோடு அப்படி ஒரு நிறுவனம் தரும்போது எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் தங்களை குறி வைத்து பல தொல்லைகள் தரும் என்று கூறி எந்த அடையாளமும் வெளிப்படாமல் அப்படி நிதி உதவிகள் செய்ய சட்டப்பூர்வ அனுமதிகள் இருக்கிறது.
மேலும் ஒரு நிறுவனம் பல கட்சிகளுக்கு நிதி தரவும் முன் வருவதுண்டு. ஆனால் நம் நாட்டில் அதற்கு ஏற்ற சூழல் இல்லை.
தங்கள் கைவசம் இருக்கும் கருப்பு பணத்தை இப்படி அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுவது அவர்களுக்கு பிடித்தமானது, பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் வாடிக்கையான ஒன்றாகும்.
ஆனால் எல்லாமே டிஜிட்டல் மயம் என்ற இலக்கை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2017–18 பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிவித்து 2018 முதலே அமுலுக்கும் கொண்டு வந்தது.
அத்திட்டத்தை தான் இம்மாத துவக்கத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் இதுவரை விற்பனை செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் மார்ச் 6–க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017–18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம் 2018ம் ஆண்டில் அமுலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.1000ல் தொடங்கி, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட 29 கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே பத்திரங்கள் விற்கப்பட்டன. தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. தனிநபர், நிறுவனம் என யார் வேண்டுமானாலும் இதை வாங்கி தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவர் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது, இதை பெறும் கட்சிகள் 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அந்த தொகை பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.
இதற்கிடையே, தேர்தல் பத்திரம் அமலுக்கு வருவதற்கு முன்பே, அதை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு, காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மூத்த தலைவர் ஜெயா தாக்குர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு தொடரப்பட்டது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து வந்தது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்தது.
தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. மோசடி நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து கட்சிகளுக்கு நன்கொடை அளித்து தேவையான பலன்களை அடையும் என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில், ஆளும்கட்சிக்கு தாங்கள் அளிக்கும் நன்கொடை, எதிர்க்கட்சிக்கு தெரியக்கூடாது என்று பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன. ஒருவேளை எதிர்க்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இதனாலேயே நன்கொடையாளரின் அடையாளம் தெரியாத வகையில் தேர்தல் பத்திரம் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
மக்கள் உரிமைச்சட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தேர்தல் பத்திரம் திட்டம் உள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமான இத்திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தேர்தல் பத்திரம் விற்பனையை ஸ்டேட் வங்கி உடனே நிறுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் மாற்றாமல் வைத்துள்ள பத்திரங்களை உடனே திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நன்கொடையாளரின் வங்கிக் கணக்கில் ஸ்டேட் வங்கி செலுத்த வேண்டும்.
கடந்த 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 6–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 13–ந் தேதிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இருந்த நடைமுறை ஒரு நிறுவனத்தின் மூன்று ஆண்டு லாபத்தில் 7.5 சதவிகிதத்தை அரசியல் கட்சிக்களுக்கு நன்கொடையாக தரலாம். மேலும் ரொக்கமாக தரப்படுவதற்கும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால் 2017–க்கும் பிறகு எந்த கட்டுப்பாடுகளுமின்றி நன்கொடை வழங்க முடிந்தது, அது பற்றிய பல ரகசியங்கள் வெளிவரும் என்று மார்ச் 6 அன்று சமர்ப்பிக்கும் அறிக்கையில் இருக்கும்!