சிறுகதை

கருணை – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் புரதான அழகோடு இயங்கிக் கொண்டிருந்தது ஒரு காபி கடை. நகரத்தில் இருந்தாலும் அந்தக் கடைக்குள் நுழைந்தால் ஒரு கிராமத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். .

மண்பானையில் செய்யப்பட்ட காபி பாத்திரம், மண் குவளைகள், மண் பாத்திரம், பழைய காலத்து ரேடியோ, அந்தக் காலத்து காற்றாடி, லாந்தர் விளக்குகள், சிம்னி விளக்குகள், டிகிரி காபி, நாட்டுக் கருப்பட்டி காபி, நாட்டுக் கருப்பட்டி டீ என்று அந்தக் கடையில் வியாபாரம் இருந்தது. ஆனால் சாப்பிடுவதற்கு ஆட்கள் யாரும் வரவில்லை.

நகரத்தில் நரகத்தைப் பார்ப்பவர்களுக்கு நகரத்தில் கிராமத்தைப் பார்ப்பது பிடிக்கவில்லை போலும். அங்கே நல்ல உயரமாக அழகாக இருந்த அவள் வாடிக்கையாளர்களுக்கு காபி போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. அவள் அன்பாகப் பேசி இதமாக கொடுக்கும் காபியில் சர்க்கரை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. கிராமத்துப் பணியாரம், கிராமத்து வடை என்று அந்தக் கடையில் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

எங்களுக்குபம பரிமாறிக் கொண்டிருந்தாள். பழைய ரேடியாேவில் பழைய பாடல் பாடிக் கொண்டு ஏதோ ஒரு கிராமத்திற்குள் நுழைந்த உணர்வு இருந்தது.

முன்னால் இருக்கும் பாய்லரில் வரும் புகை சரசரவென மேலே ஏறி மேகத்தில் கலந்து கொண்டிருந்தது. வெளியில் தொங்கிய லாந்தர் விளக்கின் ஒளி, தூரத்து வண்டியின் வெளிச்சத்திற்கு இணையான நெல் மணியை வெளிச்சமாக வைத்துக் கொண்டிருந்தது. நானும் நண்பர் பிரகாசும் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நண்பர் பிரகாஷ் அவர்கள் ஒரு கலாரசிகன். எதையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர். எப்போது காபி சாப்பிட்டாலும் அதனுடன் பிஸ்கட்டை சாப்பிடும் பழக்கம் உடையவர். குழந்தை மனம் கொண்டவர். ஓடிப் போய் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி வந்தார். அதைக் காபியில் நனைத்து நனைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கூடவே ஒரு காரமும் வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, கீர்த்திக்கும் கொடுத்தாே.. அப்போது வியாபாரம், பணம் என்ற பாகுபாடுகள் அங்கு அறுந்து போய் உறவு, நட்பு என்ற வட்டத்துக்குள் வந்தது.

இப்படி நாட்டு கருப்பட்டி காப்பியைக் குடித்துக் கொண்டிருக்கும் போது தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உன்னிப்பாக கவனித்தாள் கீர்த்தி. எனக்கு கொஞ்சம் சற்று யோசனையாக இருந்தது. தூரத்தில் கேட்ட சத்தம் அருகில் வந்த போது ஆம்புலன்ஸ் எங்கள் கண்களுக்கும் தெரிந்தது.

என்ன நினைத்தாளோ கீர்த்தி தெரியவில்லை. கோயிலைப் பார்த்தால் கும்பிடும் ஒரு பக்தனைப் போல அந்த ஆம்புலன்சைப் பார்த்து கும்பிட்டாள். எனக்கு வியப்பாக இருந்தது.

என்ன ஆம்புலன்சைப் பார்த்து கும்பிடுற? என்று கேட்டேன்.

‘சார் உள்ள இருக்கிற நோயாளி குழந்தையா? குழந்தை பெத்துக்கப் போற தாயா? அப்பாவா? இல்ல தாத்தா வா? அண்ணனா ? யாரு வேணாலும் இருக்கலாம் சார். ஏதோஒரு நோய்க்காக தான் அவங்கள ஆம்புலன்ஸில் கொண்டு போறாங்க. என்னோட பிரார்த்தனையும் கூட போகட்டும் சார். அவங்க நல்லா இருக்கணும். அதுக்குத் தான் நான் வேண்டிக்கிட்டேன்’ என்றாள் கீர்த்தி .

அப்படின்னா இந்தப் பக்கம் போற எல்லா ஆம்புலன்சுக்கு சாமி கும்பிடுவியா? என்று கேட்டபோது, ‘ஆம்புலன்ஸ் எப்ப போனாலும் அங்க இருக்கறவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு கும்பிடுவேன்’ சார் என்றாள் கீர்த்தி. ‘அது யாரா இருந்தா என்ன மனுஷன் தானே’ என்று கீர்த்தி சொன்னபோது, மனிதர்களின் மனதில் அடங்கிக் கிடக்கும், ஒடுங்கிக் கிடக்கும் அன்பை என்னால் உணரமுடிந்தது.

நானும் நண்பர் பிரகாசும் காபி குடித்துவிட்டு அந்தக் கடையை விட்டு வெளியேறும்போது, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. என்னையே அறியாமல் நான் அந்த ஆம்புலன்சைக் கையெடுத்துக் கும்பிட்டேன். நண்பர் பிரகாசமும் கையெடுத்துக் கும்பிட்டார். அந்த நோயாளி குணம் அடைவதற்கு எங்களின் பிரார்த்தனைகளையும் சேர்ந்து இருக்கும்.

இதை எங்கள் புத்தியில் உறைய வைத்த கீர்த்திக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று என் மனது நினைத்தது.

தூரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சத்தமிட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *