ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரோஜாவுக்கு எப்போதும் தலையில் ரோஜாவை சூடிக் கொண்டு போக வேண்டும் என்பது விருப்பம்.
அதனால் எங்கேயாவது ரோஜாவை பறித்து தலையில் வைத்துக் கொண்டு போவாள்.
அது திருட்டு இல்லை. அவள் வசிக்கும் தெருவில் நிறைய வீடுகளில் ரோஜாக்கள் பூத்திருக்கும் . அதுமட்டுமில்லாமல் அந்தத் தெருவில் பூக்களை விற்பவர்கள் ரொம்பவே குறைவு.
காரணம் வீடு தவறாமல் பூக்கள் பூத்துக்குலுங்கும். ரோஜாவின் வீட்டைத் தவிர,
பெயரில்தான் ரோஜா இருந்ததே தவிர அவளின் வீட்டில் மருந்துக்குக்கூட பூக்கள் இல்லை.
நீண்டு கிடக்கும் அந்த ஆடம்பரமான தெருவில் ரோஜா வீடு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏழ்மை நிறைந்த வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
தினமும் ரோஜாவை தலையில் வைத்து போக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவள், நீண்டு கிடக்கும் அந்த பணக்காரத் தெருக்களில்,
அன்று ஒரு வீட்டில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கின. மதில் சுவரைத் தாண்டி கைகள் நீட்டி தலையாட்டிக் கொண்டிருந்தன பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் .
ஆசையாசையாய் அந்த ரோஜாவை பறிக்க முற்பட்டாள் ரோஜா .
அவள் ரோஜாக்களைப் பறிப்பதைப் பார்த்த அந்த வீட்டுக்காரர் நாக்கைத் துருத்தி கொண்டு பலமாக கத்தினார்.
அந்தப் பிஞ்சு நெஞ்சில், அந்த அதட்டுக் குரல் காயமாக இறங்கியது. பயந்து ஓடினாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அதைத் துடைத்துக் கொண்டு ஓடினாள்.
ஆனால், அன்று அவள் தலையில் பூ வைக்க வேண்டுமே என்ற ஆசை. அவள் மனதில் இருந்தது. விழும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இரண்டு வீடுகள் தள்ளிச் சென்றாள்.
அவள் அழுகையை மீறி ,சில வீடுகளில் பூக்கள் பூத்து குலுங்குவதை பார்த்து புன்னகை பூத்த ரோஜா, இந்த வீட்டிலும் பூக்களை பறிக்க விடுவார்களோ? என்ற பயத்தில், ஒரு வீட்டில் எட்டிப்பார்த்தாள்.
பக்கத்து வீடுகளில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தன.ஆனால் அவள் ரோஜா பறிக்கும் வீட்டில் நாய் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.
உயர்ந்த அந்த வாசற் கதவில் காவலாளிகள் கூட இல்லை. திறந்தே இருந்தன. அந்த வீட்டில் ரம்மியம் முகாமிட்டிருந்தது.
பிரம்மாண்டமான அந்த இரும்பு கதவை மெல்லத் திறந்தாள்.
கிர் என்று சத்தத்துடன் அந்த கதவு திறந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட ரோஜா பூனைக் கால் பொருத்தி மெதுவாக நடந்து பூக்களின் அருகில் சென்றாள்.
வண்ண வண்ணமாய் பூத்துக் குலுங்கின வண்ண ரோஜாக்கள். பசக் பசக் என்று ரோஜாக்கள் பறித்தாள். சிலவற்றை தன் தலையில் சூடிக்கொண்டாள் சிலவற்றை தன் கையில் வைத்துக்கொண்டாள்.
அவள் ரோஜா பறிக்கும் போது மான்கள் மருளும் விழிகளால் சுற்றுமுற்றும் பார்ப்பது அந்தப் பெரிய வீட்டில் உரிமையாளர் ஜானகி பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த குழந்தையின் ஆசையை கெடுத்து விடக்கூடாது என்பதற்காக திட்டுவதற்கு மாறாக ரோஜா பறிப்பதை ரசித்தாள்.
எதுவும் சொல்லவில்லை. குழந்தை பார்க்கும்போது மறைந்து கொண்டாள் ரோஜாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் .சந்தோஷத்தோடு அன்று பள்ளிக்கு சென்றாள்.
அவள் சூடிய பூக்களை ஆசிரியரிலிருந்து மாணவர்கள் வரை விசாரித்தார்கள் .அவ்வளவு அழகு .மறுநாள் அதை வீட்டுக்கு வந்தாள்.
பூக்களைப் பறித்தாள். ஜானகி எதுவும் பேசவில்லை .அழகாக பறித்து தலையில் சூடிக் கொண்டு ஓடினாள்.
அன்றும் அவள் மனதில் மகிழ்ச்சி சூடிக் கொண்டது. மறுநாள், மறுநாள் என்று அவள் ஜானகி வீட்டிற்கு வருவதும் பூக்கள் பறிப்பதும் தலையில் வைப்பதுமாய் சென்றன பொழுதுகள் .
ஜானகி ஒருநாள்கூட ரோஜாவைத் திட்டவில்லை .மறுநாளும் ரோஜா வருகைக்காக காத்திருந்தாள் ஜானகி .
ஆனால் தான் தான் அந்த வீட்டின் உரிமையாளர் என்பதை ஒருபோதும் அவள் ரோஜாவிற்கு காட்டிக்கொள்ளவில்லை.
மறுநாள் வீட்டில் பூக்கள் இல்லாததை பார்த்து ஜானகி ரொம்ப வருத்தப்பட்டாள்.
ஐயோ இன்னைக்கு ரோஜா வருவாள், பூக்கள் இல்லை என்றால் வருத்தப்படுவாளே, என்ன செய்வது? என்று யோசித்த ஜானகி
தன் வயதையும் மீறி பக்கத்து வீட்டிற்குத் தாவிச் சென்றாள்.
அங்கே பூத்துக்குலுங்கிய ரோஜாக்களைப் பறித்து தன்னுடைய செடிகளில் ஒட்டி வைத்தாள்.
ரோஜா வரும் நேரம் ஆனது ஒளிந்திருந்து கவனித்தாள். அந்தப் பிஞ்சு குழந்தை ஓடிவந்து ரோஜாக்களை பறித்துக் கொண்டது. அதன் மனதில் மகிழ்ச்சி பூக்கள் பூப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானகி.
ஜானகிக்கு ஏக சந்தோசம் .அந்த குழந்தையை நாம் இன்றும் ஏமாற்றவில்லை என்று நினைத்தாள்.
நாட்கள் நகர்ந்தன.
எப்போதும் போல ஜானகி வீட்டிற்கு ரோஜா பூக்கள் பறிக்க வந்தாள்.
அப்போது அந்த வீட்டில் ஆட்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள் .
ரோஜாவுக்கு ஒரே வியப்பு.
யார் இவர்கள்? இவ்வளவு ஆட்கள் இந்த வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். என்று நாம் ரோஜாக்களை பறிக்க முடியாதோ ?என்று வருத்தப்பட்டாள்.
வீட்டுக்குள் சென்றாள்.
அங்கே ஜானகியம்மாள் இறந்துபோய் கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்தாள்.
அன்றுதான் முதன் முதலாக ஜானகியம்மாளை ரோஜா பார்த்தாள்.
அவளை அறியாமல் கண்கள் பனித்தன. சுற்றி சில பேர் நின்றிருந்தார்கள் .ரோஜா வெளியே வந்தாள்.
எப்போதும் தான் பறிக்கும் பூந்தொட்டிகளை ரோஜாப்பூக்கள்பூத்துக் குலுங்கின. ‘
சிறிது நேரம் கழித்து கொத்துக் கொத்தாக ரோஜா பூக்களை கையில் அள்ளிக்கொண்டு ஜானகி அம்மாவின் காலில் வைத்தாள். அவளையுமறியாமல் கதறியழுத, அங்கே கூடியிருந்த கூட்டத்திற்கு ஒரே வியப்பாக இருந்தது.
யார் இந்த பெண்? என்று ஒருவரை ஒருவர் விசாரித்தார்கள்.
ஜானகி அம்மாளுக்கு குழந்தைகள்என்று ஏதுமில்லை. அந்த வீடுதான் அவரின் சொத்து சுகம் எல்லாம் என்று பேசிக்கொண்டார்கள்.
பூக்கள் பறிக்கும் ரோஜாவை பார்த்து ரொம்பவே பூரிப் படைந்திருந்தாள் ஜானகி
அந்த குழந்தை மனது போகாதவாறு தினமும் பூக்கள் பிடிக்க சம்மதித்தாள்.
ஆனால் ,இன்று ஜானகியம்மாள் இறந்ததை நினைத்து ,ஒவ்வொரு பூக்களாக பறித்துக் கொண்டு போன ரோஜா ,
சிறிது நேரத்திற்கெல்லாம் கொத்துப் பூக்களை கொண்டு வந்து ஜானகி அம்மாவின் காலில் வைத்து தன்னுடைய இறுதி மரியாதை செலுத்தினாள்.
இதுதான் மனித வாழ்க்கை .நாம் ஒருவருக்கு என்ன கொடுக்கிறோமோ? அது தான் நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பதற்கு சான்றாக ,ஜானகி அம்மாளுக்கு அந்தக்குழந்தை பூக்களை கொடுத்திருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்த ரோஜாவின் கண்களிலிருந்து சாரை சாரையாய் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
பூத்தொட்டியில் இருந்த பூக்கள் தலையாட்டிக் கொண்டிருந்தன. கண்ணாடிப் பேழையில் அமைதியாக படுத்திருந்தாள் ஜானகி.
ரோஜாவின் கண்கள் அழுகையை நிறுத்தவில்லை. அழுதுகொண்டே இருந்தாள்.