சென்னை, ஆக 8–
முன்னாள் முதல்வர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு வி.ஜி.சந்தோசம் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
வி.ஜி.சந்தோசம்
முத்தமிழ் அறிஞர் உலகத் தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்தவர், எல்லோருடைய உள்ளத்திலும் குடிகொண்டிருக்கும் கலைஞர், இறந்த செய்தியைக் கேட்டு மன உளைச்சலோடு இருக்கிறேன். விஜிபி குடும்பத்தோடு 60 ஆண்டுகளாக குடும்ப நண்பராகவும், நல்ல வழிகாட்டியாகவும் இருந்தவர் அவர். இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். கருணாநிதி குடும்பத்தார் அனைவருக்கும் விஜிபி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இருக்கும்வரை அவர் புகழ் ஓங்கி நிற்கும் என்று தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் கூறியுள்ளார்.
பால் தினகரன்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த அறிவாளியாகிய அவர் யாவரும் கல்வி பெற்று உயர வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை வகுத்தவர்.
மக்களின் பசியை போக்குவதற்கு அரிசி வழங்கிய அவர், மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர். அவரை இன்று இழந்து விட்டோம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் ஆறுதலும் இறை சமாதானமும் பெற்று தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பால் தினகரன் கூறியுள்ளார்.