சென்னை, ஆக.22-–
கருணாநிதி நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய அளவிலான ஆடம்பர நிகழ்ச்சிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளாக அவற்றை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அவரது நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்றும், கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் விரைவில் அடிக்கல் நாட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் அவர், நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு கருணாநிதி ஆற்றிய பங்கின் மூலமாக நாட்டிற்கு அவர் எப்படி புகழ் சேர்த்தார் என்பது குறித்தும், அனைவரும் பயன்படுத்திடும் வகையில் கருணாநிதி பற்றிய 100 பக்க வரலாறு வெளியிட்டு, அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையிடம் கருணாநிதியின் ஆளுமையை வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.