செய்திகள்

கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

Makkal Kural Official

நினைவிடத்தில் மலர் அஞ்சலி

சென்னை, ஆக. 7–

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை இருந்தவரும், தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது அந்த இடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கருணாநிதியின் 6-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இன்று காலை அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கி காமராஜர் சாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவு பெற்றது. இந்த அமைதி பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, பி.கே.சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியிலும், அதனை தொடர்ந்து கருணாநிதி சமாதியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனையடுத்து முகாம் அலுவலகத்திலிருந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *