செய்திகள்

கருணாநிதியின் 5–ம் ஆண்டு நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணி

நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக. 7–

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர். தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5–ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் அங்கிருந்து அமைதி பேரணியை தொடங்கினார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன்,

அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், கீதாஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது.

கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம், சி.ஐ.டி.நகர் இல்லத்திற்கு சென்று, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருஉருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *