செய்திகள்

கரீபியன் தீவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,297 ஆனது

கரீபியன், ஆக. 16–

கரீபியன் தீவு நாட்டிலுள்ள ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300 ஐ நெருங்கியுள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் டிபுரோன் தீபகற்பப் பகுதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 எனப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

முதலில், இடிபாடுகளிலிருந்து 304 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 420 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்தது. இதையடுத்து, மேலும் 573 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து பலி எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை, 5,700 பேர் காயமடைந்துள்ளனர்.

13,000 கட்டடங்கள் இடிந்தது

ஏற்கெனவே, கொரோனா பரவல், வறுமை, அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றம் போன்றவற்றில் சிக்கித் திணறும் ஹைட்டியில், தற்போது இந்த நிலநடுக்கம் காரணமாக நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. சுமார் 13,000 கட்டடங்கள் இடிந்துள்ளன. வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவை மட்டுமின்றி, அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள கிரேஸ் புயல், ஹைட்டியை இன்று அல்லது நாளை அதிகாலை தாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டியில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், இந்த ஆண்டில் உலகில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகவும் மோசமானது என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *