கட்டபொம்மன் – 15
கட்டபொம்மன், ஊமைத்துரை பிள்ளைகளை ஆங்கிலேயர்களே படிக்க வைத்துள்ளனர். அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது, இவர்களிடம் வீரம் இருக்கா? இல்லையா? என்று பரிசோதிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்து, ஒரு இடத்தில் போர்கருவிகளையும், ஒரு இடத்தில் திண்பண்டங்களையும் வைத்து, இவர்களை அழைத்து உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் வாள்களையும், கேடயங்களையும் எடுத்துள்ளார்கள்.
இவர்களது ரத்தத்தில் இன்னும் வீரம் இருக்கிறது என்று வியந்து பார்த்த ஆங்கிலேயர்கள், போர்க்கலையை தவிர்த்து, அவர்களை பிஏ வரை படிக்க வைத்து இருக்கிறார்கள்.
கம்பெனி செல்வத்துக்கு 40 வயதில் திருமணம் ஆனது. இவருக்கு நிச்சயம் செய்த பெண் வேறு ஜமீனுக்கு கொடுத்துவிடவே, கோபப்பட்ட கம்பெனி செல்வம், இன்னொரு பெண் பிறந்து வளர்ந்த பின்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அதன்படி அவர் திருமணமும் செய்துள்ளார்.
நடுசெக்காரக்குடி ஊரில் பரம்பரை சம்மந்தக்காரர் வீட்டில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் மகன் கம்பெனி செல்வத்தின் திருமணம் நடந்துள்ளது.
அரண்மனை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களுக்கான ‘மாப்பிள்ளை சாமிகள்’ என்று இருப்பார்கள். அவர்களை தான் அரண்மனை வீட்டு பெண்களுக்கு மணம் முடிப்பார்கள்.
அதே போல் மாப்பிள்ளை சாமி வீட்டு பெண்களுக்கு அரண்மனை வீட்டு ஆண்களைத்தான் மணம் முடித்து கொடுப்பார்கள். எனது தந்தை வரை, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.
கம்பெனி செல்வம் மரணம்
1871, ஆகஸ்ட் 24ல் கம்பெனி செல்வம் இறக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள். கம்பெனி செல்வத்தின் மூத்த மகன் தளவாய்குமாரசாமி, தன் தந்தை இறந்ததால், அவருக்கான பணத்தை தனக்கு அனுப்பி தருமாறு ஆங்கிலேயர்களின் திருச்சி முகாமிற்கு கடிதம் எழுதுகிறார். அப்போது தளவாய்குமாரசாமிக்கு வயது 30.
வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை மரணத்துக்கு பின், அவர்களது குடும்பத்தினர் 70 ஆண்டுகாலம் சிறையில் இருந்து இருக்கிறார்கள்.
சிறையில் இருந்து வெளியேற விரும்புவதாக தளவாய்குமாரசாமி ஆங்கிலேயர்களிடம் தெரிவித்து இருக்கிறார். வெளியில் சென்று எங்களை எதிர்த்து போராடாமல் இருந்தால் நாங்கள் உங்களை வெளியில் அனுப்புகிறோம் என்று ஆங்கிலேயர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
நாங்கள் உங்களை எதிர்த்து போராடமாட்டோம் என்று உறுதி கொடுத்த பின்னர் தான் வெளியில் செல்ல அனுமதித்தனர். எங்கு செல்ல விருப்பம் என்று கேட்டதற்கு, எங்கள் உறவினர்கள் செக்காரகுடியில் தான் இருக்கிறார்கள். நாங்கள் அங்கேயே செல்கிறோம் என தளவாய் குமாரசாமி சொல்லி இருக்கிறார்.
100 படை வீரர்களுடன் செக்காரகுடிக்கு தளவாய்குமாரசாமி குடும்பத்தினரை ஆங்கிலேயர்கள் அனுப்பி வைத்து உள்ளனர். சில நாட்கள் கழித்து ஆங்கிலேயர்களிடம் தளவாய் குமாரசாமி, செக்காரகுடி மக்களிடம் நாங்கள் நன்றாக பழகிவிட்டோம். அதனால் எங்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
திருச்சி சிறையில் இருந்து வந்த கட்டபொம்மன் வாரிசுகளுக்கு செக்காரகுடி மக்கள் தான் வீடு கட்டி கொடுத்து ஆதரித்துள்ளார்கள்.
![]()





