சிறுகதை

கம்பீரமான காவலர் – மு.வெ.சம்பத்

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சியாம் தனது ஊரில் வந்து செட்டிலானார். அவர் வசிக்கும் தெருவில் மொத்தம் பத்து வீடுகள் தான். அந்தத் தெருவில் உள்ள எல்லோரும் ராணுவ அதிகாரிக்கு நிறைய மதிப்பு கொடுத்தார்கள். தெருவைச் சுத்தமாக வைத்திருத்தல், புதிதாக ஆள் நுழைந்தால் அவரை உடனே விசாரித்தல், காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் தெருவில் விற்க வந்தால் ஆய்வு செய்தல், ஆங்காங்கே தெருவில் இடைஞ்சல் ஏற்படா வண்ணம் மரங்கள் நட்டு வளர்த்தல், மக்களிடையே பரஸ்பர நட்பு வளர்த்தல் போன்ற இன்னும் பல நல்ல வேலைகளில் தெருவில் உள்ளவர்களை இணைத்து எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ சியாம் வகை செய்தார். கோபம் வந்தால் சியாம் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். ஆதலால் எல்லோரும் அவரிடம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். ஆனால் செல்லமாக இவரை தெருவின் கம்பீரமான காவலர் என்று அவர் காதுக்கு எட்டாதபடி அந்தத் தெரு மக்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.

ஊருக்கு வெளியே வாங்கிய இரண்டு ஏக்கர் நிலத்தில் நிறைய மரங்கள். பூச்செடிகள். காய்கறி மற்றும் பழச் செடிகள் பயிரிட்டிருந்தார். நல்ல வளமான மண் என்பதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. விளைச்சல் பொருட்களை விற்பதற்கு முன் தனக்கும் தங்கள் தெருவில் உள்ளவர்களுக்கும் எடுத்து வைத்து விடுவார். அவரவர் வீட்டின் தேவைக்கேற்ப விளை பொருட்களைத் தருவார். அவரவர்கள் தங்கள் வீட்டிலுள்ள உண்டியலில் தங்களுக்குத் தந்துள்ள விலை பொருட்களுக்கு தாங்களே ஒரு விலை நிர்ணயித்து அதில் போட்டு வர வேண்டும். அந்தத் தெருவில் உள்ள பிள்ளைகள் படிப்பு, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவ செலவு, அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குண்டான செலவு, மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் செலவு போன்ற அத்தியாவசியமானவைகளுக்கு உண்டியல் பணம் உபயோகப்படுத்தப்படுத்துதல் என்ற ஒரு திட்டத்தை தெரு மக்களிடம் செயல்படுத்தியிருந்தார் சியாம். ஏதாவது மருத்துவ செலவு அதிகம் யாருக்காகாவது தெருவில் ஏற்பட்டால் அந்தத் தெரு மக்களின் பையன் வெளி நாட்டில் வேலையில் இருந்தால் சியாம் தானே அவர்களைத் தொடர்பு கொண்டு ஒரு தொகை அவர்களிடமிருந்து பெற்று அடுத்து செய்ய வேண்டியதைச் செய்வார். சியாம் ஒரு முக்கியஸ்தவராகவே வலம் வந்தார்.

அன்று காலையில் அந்தத் தெருவில் ஒரு குட்டி நாயின் கூக்குரல் கேட்டது. சற்று நேரத்தில் வந்து அதைப் பார்த்த சியாம், அதை நன்றாக பரிசோதித்து விட்டு அதற்கு உணவளித்து தனது வீட்டு வாசலில் விட்டு விட்டார். அந்த நாயும் அந்தத் தெருவிலேயே வளர்ந்து வந்தது. எல்லோருடைய அன்பைப் பெற்று தெருவில் வலம் வந்தது. சியாம் மாதத்திற்கு ஒரு முறை அதை கால்நடை மருத்துவரிடம் கொண்டு காண்பித்து நோய் நொடியில்லாமல் பார்த்துக் கொண்டார். ஆண் நாய். அதற்கு ‘காரமேல்’ என்ற பெயர் சூட்டினார். காரமேல் மிகவும் சுறுசுறுப்போடு மட்டுமல்லாமல் அந்தத் தெருவில் புது ஆட்கள் மற்றும் எந்த விலங்குகளையும் நுழைய விடாமல் துரத்தி விடும். அப்போது அது காட்டும் ஆக்ரோஷம் பார்ப்பவர் எல்லோரையும் பதைபதைக்க வைக்கும் என்றால் மிகையாகாது.

அன்று சியாம் வீட்டிற்கு வந்த அவரது தம்பி காரமேல்லைக் கண்டவுடன் சியாமிடம் எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த அரிய வகை நாயை என்று கேட்க, சியாம் அதுவாக வந்தது என்றார். சியாம் தம்பி தான் இருந்த ஒரு வாரத்தில் காரமேலுக்கு வேட்டையாடுவது எப்படி, எதிரிகளைத் தாக்குவது எப்படி, சண்டையில் தன்னைக் காப்பது எப்படி என்ற பல விஷயங்களில் அதற்கு டிரெயினிங் கொடுத்து அதையொரு வேட்டை நாயாகவே மாற்றினார். காரமேலும் வந்த நபரையே சுற்றிச்சுற்றி வந்தது கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர். சியாமின் தம்பி தனது ஊருக்குச் சென்று இரண்டு நாட்கள் கழித்து காலையில் காரமேலைக் காணாமல் தெருவில் உள்ளவர்கள் கவலையுற்று தேடினார்கள். எல்லோரும் சியாம் வீட்டை நோக்கிச் சென்றார்கள். ஷ்யாம் வீட்டில் இல்லாதது கண்டு மேலும் கவலையுற்றார்கள். ஷ்யாமின் மனைவி விஷயம் கேட்டு மிகவும் கவலையுற்றார். இவ்வளவு காலையில் எங்கு சென்றார் என்று சியாம் மனைவி யோசித்தார்.

சற்று நேரத்தில் வந்த சியாம் தனது வீட்டின் முன் மக்கள் திரண்டிருந்தைக் கண்டு திகைத்து என்ன என்று கேட்க, காரமேலைக் காணோம் என்று கவலை தோய்ந்த குரலில் எல்லோரும் கூறினார்கள். சியாம் சிரித்துக் கொண்டே, இனிமேல் காரமேல் நமது தோட்டத்துக் கம்பீரமான காவலர் என்று நகைத்துக் கொண்டே கூறினார். நாம் காரமேலைக் காண இனி தோட்டத்துக்குத் தான் செல்ல வேண்டுமோ என மக்கள் கூற வாரம் ஒரு முறை காரமேல் உங்களைக் காண வருவார் என்று சியாம் கூற மகிழ்வுடன் கூட்டம் கலைந்தது.

Leave a Reply

Your email address will not be published.