சிறுகதை

கம்பளத்தார் கல்யாணம்|ராஜா செல்லமுத்து

முதல் குழந்தை பிறக்கும் வரை திருமண சடங்குகள் நடக்கிறது என்றால் நமக்கு வியப்பு வருகிறது அல்லவா?

திகைப்பூட்டும் இவர்களின் திருமணங்களை திரும்பிப் பார்த்தால் நமக்கு ஆச்சரியங்கள் பூச்சொரியும்.

இது யார் வீட்டுக் கல்யாணம்.

இது கம்பளத்தார் வீட்டுக் கல்யாணம்.

அந்தச் சமூகத்தில் வரதட்சணைக் என்று யாரும் வாங்குவதே இல்லை.

“நாடோடியாகத் திரிந்த மனித இனம், குடும்பம் என்னும் கட்டுக்குள் வந்த பிறகுதான், உறவு என்ற வார்த்தையே நமக்குள் வந்து ஒட்டிக் கொண்டது.

அதுவரையில் கட்டுப்பாடுகளற்று, முறைதவறி, வாழ்ந்த மனிதர்களுக்கு, திருமணம் என்ற உறவு முறையே ,குடும்பம் எனும் கோபுரத்தைக் கட்டித் தந்தது.

தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை தமிழர்களின் திருமண முறைகள் பாடல் வழியே பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றன .

பண்டைய காலத்தில் ஏறுதழுவுதல் எனும் மாட்டை அடக்கிய பிறகு தான் பெண் கொடுத்திருக்கிறார்கள்.

இளவட்ட கல்லைத் தூக்கிய பிறகு தான் இணை சேர்த்திருக்கிறார்கள் என்ற செய்தியை படித்திருக்கிறோம் ;கேட்டிருக்கிறோம்.

ஏன்? ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆண் – அந்தப் பெண்ணின் வீட்டிலேயே வேலை செய்து, அந்த வீட்டில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் எடுத்த பிறகு தான்,அந்த ஆணுக்கு அவன் விரும்பிய பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கமும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.

பெண் பார்க்கப் போகும்போது பொன் கொடுத்துப் பெண் பார்க்கும் பழக்கமும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது.

இப்படி ஆரம்பித்த ஆரம்பக் கால திருமண முறைகள்,தற்போது ஆடம்பரத்தில் சிக்கித் திணறுகிறது. இருப்பவர்கள் கோடி கோடியாக செலவு செய்வதும் இல்லாதவர்கள் பெண்ணுக்கு வரதட்சணை கூட தர முடியாமல் கஷ்டப்படுவதும் கண்கூடு.

முன்பு, ஒரே முறையில் நடைபெற்று வந்த இந்தத் திருமண முறைகள் தற்போது சமூகத்துக்கு சமூகம் இனத்துக்கு இனம் சாதிக்கு சாதி வேறுபடுகிறது; மாறுபடுகிறது.

சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் வேரூன்றி விழா எடுக்கின்றன. திருமணங்களைத் திருவிழா போல் நடத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட இந்தத் திருமண உறவை ராஜகம்பளத்து நாயக்கர் வம்சங்கள் எப்படிக் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதை இந்தக் கம்பளத்தார் கல்யாணம் மூலம் பார்க்கலாம்.

“தலவாலு அட்டந்து தேவுடு மொக்கந்து குச்சிலு போந்து, சூடண்டமா பெண்ட்லி”என்று சுந்தரத் தெலுங்கில் பாட்டுப்பாடி உறவுகளை அழைக்கும் திருமண அழைப்புப் பாடல் இது.

இதைத் தமிழ்ப் படுத்தினால்

“ஊருக்கு வெளியே குச்சி கட்டி, வெற்றிலையில் உறவுகள் பால் ஊற்ற, சாதிசனம் உரிமையோடு அழைக்குது, சாமியும் மறுக்காது வந்து வாழ்த்திட்டு போகுது. வாரீகளா பார்க்கலாம் “என்பதே சுந்தரத் தெலுங்கின், சங்கத் தமிழ் மொழி பெயர்ப்பு.

கம்பளத்தார் கல்யாணங்களில் களை கட்டி நிற்கும் இந்த சுந்தரத் தெலுங்குப் பாடல்.

முன்பு, ஒரு திருமணம் என்றால் ,அந்த திருமணம் 365 நாட்களும் திருமண நாட்களாகவே கொண்டாடப்பட்டது. ஆனால், இன்று நாகரீக நிகழ்வின் நீட்சியாய் அது ஐந்து நாட்களாக குறைந்துவிட்டது.

“ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி ஆடம்பரம் ஆர்ப்பரிக்கும் திருமணங்கள்.. கடலுக்குள் பந்தலிட்டு கனவுகளை நிஜமாக்கும் கல்யாணங்கள்”என்று எத்தனையோ திருமணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.கேட்டிருக்கிறோம் .

ஆனால் கம்பளத்தார் கல்யாணங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பச்சைக் குடிலில் தான் நடக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? சில விஷயங்கள் வியப்பாகவும் அதிசயமாவும் தான் இருக்கும்.

வியப்பின் விலாசம் விலாவாரியாக விரிகிறது.

சராசரி மனிதர்களின் முகூர்த்த நேரம் என்பது நமக்கெல்லாம் பகல் பொழுதாக தான் இருக்கும். ஆனால் கம்பளத்தார்களுக்கோ முற்றிய இரவுதான் முகூர்த்த நேரம்.

வரதட்சணை என்ற பெயரில் பெண் வீட்டாரைக் கொள்ளையடிப்பார்கள் மாப்பிள்ளை வீட்டார்கள்.

ஆனால் வரதட்சணைக்கு கம்பளத்தார்கள் கடிவாளம் போட்டு இருக்கிறார்கள். அந்தச் சமூகத்தில் வரதட்சணைக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. வரதட்சணை என்று யாரும் வாங்குவதே இல்லை.

திருமணம் முடிந்த அந்த இரவுதான் வழக்கமான முதலிரவு .ஆனால் ராஜகம்பளத்து நாயக்கர்களுக்கு திருமண நாளின் அடுத்த இரவே முதலிரவு . இப்படி ஆரம்பிக்கும் திருமண சம்பிரதாயங்கள் ….. முதல் குழந்தை பிறக்கும் வரை திருமண சடங்குகள் நடக்கிறது என்றால் நமக்கு வியப்பு வருகிறது அல்லவா?

திகைப்பூட்டும் இவர்களின் திருமணங்களை திரும்பிப் பார்த்தால், நமக்கு ஆச்சரியங்கள் பூச்சொரியும்.

முதல்நாள் பெண் அழைப்பு , மற்ற சமூகத்தை போலவே முதல் நாள் பெண் அழைப்பு. நாத்தனார், உறவினர்கள் பாட்டுப்பாடி வீட்டிலிருந்து பெண்ணை அழைத்து வருவார்கள்

ஊருக்கு மத்தியில் பச்சைக் குடில் அமைப்பார்கள். அதில்தான் பாரம்பரியம் மாறாத திருமணம் அரங்கேறும்

பஞ்ச கல்யாணிக் குதிரையில் தான் மாப்பிள்ளை அழைப்பு.

ராஜகம்பளத்து நாயக்கர்களின் பாரம்பரியம் மாறாத நடனம் அங்கு அரங்கேறும்.

ஐந்து நாள் திருமண நிகழ்வில் முதல்நாள் புத்தரிசி நெல்லிடித்து குலதெய்வத்திற்கு படையல் வைப்பார்கள்.

இதுபோல பெண் வீட்டிலும் புத்தரிசி படையல் வைப்பார்கள்.

மணமகன் வீட்டார், மலையில் இருந்து உசிலை மர குச்சி, ஆலமரத்துக் கிளைகளை வெட்டி எடுத்து வருவார்கள்.

உசிலை மரக்குச்சிகள் 9 குச்சிகளை ஊன்றி மேலே இலை தழைகளை போட்டு குடில் அமைப்பார்கள் .

முதலில் கட்டியது பெண் குடில். அந்தக் குடிலை மறைத்து இன்னொரு குடில் செய்வார்கள். அது தான் மாப்பிள்ளைக் குடில்

குடிலைச் சுற்றி, ஆல மர இலைகளால் ஆன தோரணம் கட்டித் தொங்க விடுவார்கள்.

திருமண நாளன்று அதிகாலை மாப்பிள்ளை வீட்டிலிருக்கும் மணபெண்ணை அழைத்து வருவார்கள். பெண் – மாப்பிள்ளை முகம் மட்டும் தெரிகிற மாதிரி வெள்ளைத் துணியில் கட்டுவார்கள். இரண்டு பேருக்கும் எதிரே வெங்கலத் தட்டில் பால் ஊற்றி வைப்பார்கள். அதில் வெற்றிலையைப் போட்டு பாலைத் தொட்டுத் தொட்டு இரண்டு பேரையும் உறவினர்கள் வாழ்த்துவார்கள்.

பஞ்சகல்யாணிக் குதிரையில் மாப்பிள்ளை வருவார் . அந்தக் குடிலைச் சுற்றிச் சுற்றி வருவார் .

உறவுக்காரர் ஒருவர் மாப்பிள்ளையைத் தூக்கிவந்து மணப்பெண்ணின் அருகே அமர வைப்பார்.

சம்பிரதாயங்கள் முடிந்ததும் பெண்ணுக்கு கூரைப் புடவை கட்டியும் மாப்பிள்ளை மஞ்சள் சட்டை போட்டும் பச்சை குடிலுக்கு அழைத்து வருவார்கள்.

மாப்பிள்ளை பெண் இரண்டு பேர்களும் இரண்டு குடிலில் இருப்பார்கள்

திருமணத்தை நடத்தி வைக்கும் கம்பளி நாயக்கர் சடங்குகளைத் தொடங்குவார்.

சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் இந்தத் திருமண நிகழ்வில் உறுமி மேளம் உறுமும்.

பஞ்ச கல்யாணிக் குதிரையில் மாப்பிள்ளை மந்தையை மூன்று முறை சுற்றி வருவார். குதிரையிலிருந்து மாப்பிள்ளையைக் கால் படாமல் தூக்கி போய் உட்கார வைப்பார்கள்.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சில சடங்குகள் நடக்கும்.

பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவார் .சொந்தங்கள் வாழ்த்துப் பாடல் பாடுவார்கள். பெண்கள் குலவை போட்டுப் பாடுவார்கள்.

திருமணம் முடிந்ததும் ராஜகம்பளத்து நடனத்தை ஆடிப் பாடி மணமக்களை மகிழ்விப்பார்கள் .

பச்சைக் குடிலில் திருமணம் முடிந்த பிறகு பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போய் விருந்து வைப்பார்கள்.

திருமணம் என்றால் வாழ்வின் ஒரு நிகழ்வாக பார்க்கப்படும். இந்தச் சமூகச் சராசரி நிகழ்வு. சில சமூகங்களில் இன்றும் எழுதப்படாத சட்டங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் மக்கள் பாரம்பரியம் – பண்பாடு, சமூகக் கலாச்சாரம்,மாறாத விழுமியங்களை விழுங்காமல் இன்றும் உயிர்ப்போடுத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ நாகரிக முதலைகள் இந்த உலகில் வலம் வந்தாலும் சில கலாச்சாரங்களை அந்த முதலைகள் விழுங்கி விடுவதில்லை. மாறாக வரலாற்றுப் பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் கூறுகள் நாகரிக முதலைகளை விழுங்கி விட்டுக் கலாச்சாரங்களைக் காவல்காக்கின்றன..

இப்படிச் சமூகத்துக்குச் சமூகம், இனத்திற்கு இனம், சாதிக்கு சாதி மாறுபடுகிறது இந்தத் திருமண முறைகள்,

ஆனால் ராஜகம்பளத்து நாயக்கர்கள் திருமண முறைகள், தொன்மைப் பழக்க வழக்கங்களை அழிக்காமல் பண்பாடு மாறாத ராஜபாட்டையாகேவே இன்றும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

முன்னோர்கள், தம் மூதாதையர்கள், பெரியோர்களை மதிக்கும் பண்பும் அன்பும் அவர்கள் ஆதி காலத்திலிருந்து இன்றும் பின்பற்றியே வந்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜகம்பளத்து நாயக்கர்கள் போல மூத்தோரை மதிக்கும் சமூகம்தான் நிலையான புகழை அடைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *