கம்பம், மே 30–
தேனி மாவட்டம் கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பம் ஆசாரிமார் தெருவில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 65). இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இரவு காவலராக வேலை பார்த்தார். கடந்த மே 27 ந்தேதி கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்து நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றி வந்தது. அப்போது பால்ராஜ் இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தார்.
சிகிச்சை பெற்றவர் பலி
அவரை கடந்து சென்ற யானை துதிக்கையால் தள்ளி விட்டதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
காயம்பட்ட பால்ராஜை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கியிருந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இதுபற்றி கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.