செய்திகள்

கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை: மநீம நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

சென்னை, மே 7–

’தோல்விக்கு பின்னும் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை, மாறுவார் என்ற நம்பிக்கையுமில்லை’ எனக்கூறி, கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள், பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

தன் ராஜினாமா குறித்து மகேந்திரன் கூறியதாவது:–

கட்சியின் பெரிய தோல்விக்கு பிறகும், கமல் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. கமல் மீண்டும் நம்மவராக செயல்பட வேண்டும்.

தமிழகத்தைச் சீரமைப்பதைக் காட்டிலும், முதலில் கட்சியைச் சீரமைப்பது அவசியம். இவ்வளவு பெரிய தோல்விக்கு பிறகும், கமலைச் சுற்றியுள்ள கூட்டம், கட்சியைப் பிளவு படுத்தும் நடவடிக்கையிலேயே தீவிரமாக உள்ளது. கமலும் அவரை மாற்றிக் கொள்ளவில்லை என்றார்.

துணை தலைவர் பொன்ராஜ் கூறுகையில், ”தேர்தல் தோல்வியை அடுத்து, கட்சியைச் சீரமைக்க, முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளோம். அதன் மீதான முடிவை கமலே எடுப்பார்,” என்றார்.

மகேந்திரன் ஒரு துரோகி: கமல் அறிக்கை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். ‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக்கொண்டார். ஒரு களையே தன்னை களையென்று புரிந்துகொண்டு தன்னைத்தானே நீக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *