சென்னை, நவ.7–
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என பல அவதாரங்களை பெற்றுள்ள கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைககள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கி கமல்ஹாசன்பிறந்தநாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தொண்டு சிறக்க விழைகிறேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதே போல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கலைஞரால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. கழகத்தலைவரின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதவாத – பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் அவரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.