செய்திகள் நாடும் நடப்பும்

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை

Makkal Kural Official

திருவாரூர், நவ. 5

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த கிராமமான துளசேந்திரபுரத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம் கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் – ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா. பின்னர் அரசு வேலை கிடைத்ததையடுத்து கோபால் ஐயர் குடும்பத்துடன் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு வெளியூர் சென்று விட்டார். தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறிவிட்டனர்.

கோபால் ஐயர் சென்னையில் வசித்த போது, மகள் சியமளா அமெரிக்காவில் சட்டம் படிக்கும் போது உடன் படித்த டொணால்ட்டை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்த பின் டொனால்ட்டை சியமளா விவகாரத்து செய்தார். இதில் கமலா தனது தாயார் சியமளாவை போல் அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார்.

தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், இன்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். இந்த நிலையில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி துளசேந்திரபுரத்தில் உள்ள தாய் வழி குடும்ப குலதெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

வாஷிங்டனில் இருந்து 13 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள துளசேந்திரபுரத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலுக்கு வெளியே கிராம மக்கள் வைத்துள்ள ஒரு பெரிய பேனரில், ‘மண்ணின் மகள்’ தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்குவுக்கு கடந்த 2014ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் நன்கொடையை சித்தி சரளா மூலம் கமலா ஹாரிஸ் வழங்கியுள்ளார். இதே போன்று மடப்பள்ளிக்கு தாத்தா கோபால் ஐயர் நிதி வழங்கியிருக்கிறார். இவைகள் அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *