செய்திகள் நாடும் நடப்பும்

கப்பல் படைக்கு 200 பிரம்மோஸ் ஏவுகணைகள் ரூ.15,000 கோடியில்

* ரூ.15,000 கோடியில்* உள்நாட்டிலேயே தயாரிப்பு

* சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண்

ரஷ்ய நட்புறவு தரும் நன்மை பாரீர்


ஆர். முத்துக்குமார்


இம்மாத துவக்கத்தில் இந்திய கப்பற்படை அதிகாரிகள் அதிவேக பிரம்மோஸ் ஏவுகணையைக் கடலில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒன்றை மிக துல்லியமாக தாக்கிச் சாதனை புரிந்தது.

அது மூன்று மடங்கு ஒலியை விட வேகத்தில் பறந்து சென்றது. இலக்கை பல்வேறு கட்டங்களில் இடம் மாறினாலும் துல்லியமாக அதைத் தேடிப் பிடித்து அழிக்கும் ஆற்றல் ‘Seeker & booster’ பெற்று இருந்ததையும் பார்த்த கடற்படை அதிகாரிகள் உடனே 200 பிரம்மோஸ் ஏவுகணை வேண்டும் என்று ஆர்டர் கொடுத்து விட்டார்கள்.

இது பிரதமர் மோடியின் உள்நாட்டிலேயே தயாரிப்பு அறைகூவலுக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்.

மேலும் நமது ராணுவ பாதுகாப்பு அரணுக்கும் வலுவான சக்தியும் கிடைத்து விட்டது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் சூப்பர் சானிக் ஏவுகணைகளை தயாரிக்க 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இதன்படி இரு நாடுகளும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கின. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.

புதிதாக உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024–-ம் ஆண்டில் புதியஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய, ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2001–-ம் ஆண்டில் ஒடிசாவில் சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான் பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு முப்படையிலும் சேர்க்கப்பட்டன. இந்த ஏவுகணையின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பின்னணியில் இந்திய கடற்படைக்காக ரூ.15,000 கோடியில் மேம்படுத்தப்பட்ட 200 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் விரைவில் நடைபெறும்.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் இடையே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மேலும் சவுதி உட்பட பல நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

தற்போது அமெரிக்கா, சீனா உட்பட பல உலக நாடுகள் ஒலியின் வேகத்தை விட அதாவது ‘சூப்பர் சானிக்’ வேகத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்த ஆய்வுகள் செய்து கொண்டும், சோதனை வெள்ளோட்டங்களும் நடத்திக் கொண்டு இருந்தாலும் நமது பிரம்மோஸ் ஏவுகணை வேகத்தையும் துல்லியத்தையும் உறுதி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *