நாகர்கோவில், மே 16–
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தனர்.
திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.
திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.
மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (வயது 46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.