நாகர்கோவில்,மார்ச்.28-
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மீண்டும் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் எம்.பி. அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று காலையில் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தனது இல்லத்தில் தாயார் தமிழ்ச்செல்வி வசந்தகுமாரிடம் ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தனது தந்தையும், கன்னியாகுமரி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான மறைந்த எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் தனது வேட்புமனுவை வைத்து வணங்கினார்.
பின்னர் அவர் நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஜவகர் பால் மஞ் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடன் வந்தனர். பின்னர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஸ்ரீதரிடம் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மொத்தம் 25 பேர் 33 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சொத்து விவரம்
விஜய் வசந்த் எம்.பி. வேட்புமனு தாக்கலில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:–
தனது பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.48 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரத்து 856-ம், தன் மனைவி பெயரில் ரூ.1 கோடியே 81 லட்சத்து 82 ஆயிரத்து 838-ம், தன்னை சார்ந்தவர்கள் 2 பேர் பெயரில் மொத்தம் ரூ.55 லட்சத்து 16 ஆயிரத்து 58-ம் இருப்பதாக கூறிப்பிட்டு உள்ளார். இதில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் தனது கையிருப்பாகவும், ரூ.43 ஆயிரம் தன் மனைவி கையிருப்பாகவும் வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் 399 பவுன் நகை மற்றும் 2 கார்கள் வைத்து இருப்பாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அசையா சொத்துக்களை பொறுத்த வரையில் தனது பெயரில் ரூ.12 கோடியே 2 லட்சத்து 42 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.20 லட்சமும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ரூ.3 கோடியே 6 லட்சத்து 16 ஆயிரத்து 359 கடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தன் மீது போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.