கன்னியாகுமரி, மார்ச் 20–
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரணியல் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு ரெயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதைப் பார்த்த லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பிறகு சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தண்டவாளத்தில் கற்களை வைத்துச் சென்ற நபர் யார் என்பது குறித்தும், ரெயிலை கவிழ்க்க சதி நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சரியான நேரத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கற்களை ரெயில் ஓட்டுநர் கண்டறிந்து ரயிலை உடனடியாக நிறுத்தியதால், நடைபெறவிருந்த பெரும் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது.
தண்டவாளத்தில் கற்களை வைத்தவர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.