நிறுவனர் துரைசாமி – சாந்தி துரைசாமி வழங்கினார்கள்
சென்னை, ஆக.12–
சென்னை சேத்துப்பட்டில், சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கும் சுயசக்தி விருதுகள்– -2024 நிகழ்ச்சி நடந்தது. விவசாயம், சமூக நலன், கல்வி, கலை, சுகாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் 12 பேருக்கும், பொது வாழ்க்கையில் ஒரு பகுதியாக சிறந்து விளங்கும் கனிமொழி எம்.பி., ஐ.ஏ.எஸ். அதிகாரி இன்னசென்ட் திவ்யா உட்பட முக்கிய பெண் ஆளுமைகள் 11 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
‘சக்தி மசாலா’ நிறுவனர் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி இருவரும் இணைந்து கனிமொழி எம்.பி.,க்கு விருது வழங்கினர். திரையில் இடம்பெற்ற புகைப்படங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கனிமொழி எம்.பி. பதிலளித்து பேசினார்.
‘‘தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்கினால், மிகவும் பாராட்டுக்கு தகுந்தவர் பிரதமர் மோடி. முதல்வர் ஸ்டாலின், எனக்கு பாசமான அண்ணன். மறைந்த முதல்வரும், என் தந்தையுமான கருணாநிதி, நான் இரவில் பயணம் செய்வதை விரும்பமாட்டார். அப்படி பயணம் செய்தால், அதற்காக கோபம் கொள்வார்.
நடிகர் விஜய் அவரது துறையில், உழைப்பு, தெளிந்த பார்வையால் உயரத்தை எட்ட முடிந்துள்ளது. அதே தெளிவோடும், உழைப்போடும், தொடர்ந்து பயணிக்க வேண்டும்’’ என்று தன் கருத்துக்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பிராண்ட் அவதாரின் சுயசக்தி விருதுகள் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமச்சந்திரன், சிறந்த பெண் சாதனையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.