சிறுகதை

கனவு இல்லம் – ராஜா செல்லமுத்து

உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும்தான் மனித வாழ்வின் அடிப்படை. இந்த அடிப்படையில் அடிப்படை இல்லாமலேயே நிறைய மனிதர்கள் அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு இருப்பவர்களுக்கு உடை இல்லை. உடை இருப்பவர்களுக்கு உணவில்லை. இந்த இரண்டும் இருப்பவர்களுக்கு உறைவிடம் இல்லை என்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் கவலையாக இருக்கிறது.

இந்தத் தத்துவங்களின் சாரத்தை புரிந்து கொண்ட பிரகாஷ் எப்படியாவது தான் ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்ற நினைவில் இருந்தான்.

அவனுடைய மாத வருமானம் அவன் குடும்பத்தை ஓட்டுவதற்கு சரியாக இருந்தது. அப்படியே அஞ்சு பத்து சேமித்து வைத்தாலும் அந்த பணத்திற்கும் ஏதாவது ஒரு இடையூறு வந்தே தீரும்.

சிறுகச் சிறுக சேமித்து வைத்து அதை நிறைவாகப் பார்க்கும்போது பிரகாசுக்கு ஒரு பூரிப்பு வரும்.

ஆனால் அந்தப் பூரிப்பின் நீளம் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அதை அழித்துவிடும். எப்படியும் இந்த மண்ணில் தனக்கான ஒரு இடத்தை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

சம்பாதிப்பதில் பெரும்பான்மையான பணத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டு அவனின் சேமிப்பு கரைந்து போயிருந்தது. வாடகை வீட்டில் குடியிருக்கக் கூடாது என்ற முடிவில் இருந்தான் பிரகாஷ்.

எப்படியும் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் முன்பணமாக கொஞ்சம் பணத்தைக் கொடுத்த பிறகு ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ எனப்படும் இன்ஸ்டால்மென்ட் இல் பணம் கட்டி வீட்டை சொந்தமாக்கி விடலாம் என்ற நினைப்பிலேயே இருந்தான் பிரகாஷ்.

‘என்னங்க இந்த மாசம் வீடு வாங்க பணம் சேமிச்சு வச்சு தான் வேண்டுமா?’ என்று மனைவி விஜி கேட்க……

‘ஆமா விஜி…. ஒவ்வொரு மாசமும் சேமிச்சு வச்சு தான் வீடு வாங்க முடியும். இப்படி நான் ஒவ்வொரு மாதமும் சேமித்து வைக்கிறது எப்படியோ ஒரு ரூபத்தில் செலவழிந்து போகிறது. அதனால இனிமே வீட்டுக்காக சேர்த்து வைக்கிற பணத்தை நீ கேட்காதே நான் கொடுக்கிற பணத்திலேயே குடும்பத்தை நடத்தப் பாரு’ என்று கொஞ்சம் கறாராகப் பேசினான் பிரகாஷ்.

‘நீங்க குடுக்குற காசுக்கு உப்பு, புளி வாங்கி சமைச்சு சாப்பிடலாமே தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது’ என்று மனைவியும் கொஞ்சம் கோபம் காட்டினாள்.

‘இப்ப என்ன பண்ணச் சொல்ற? என்ன எம்புட்டு நாளைக்குத் தான் இந்த வாடகை வீட்டிலேயே குடி இருக்கிறது. நமக்குன்னு ஒரு சொந்த வீடு வேண்டாமா? உனக்கு இந்த வாடகை வீட்டில் இருந்து பழகிப் போச்சு. ஆனா எனக்கு இதுல இருக்க பிடிக்க மாட்டேங்குது. அதனால ஒரு வீடு வாங்கணும் அதுதான் என்னோட லட்சியம்’ என்று சொன்னான் பிரகாஷ்.

‘இலட்சியம் இருக்கட்டுங்க. அதற்காக நம்முடைய சராசரி செலவு செய்யாம இருக்கிறது. தப்புங்க’ என்று பிரகாசுக்குப் புத்திமதி கூறினாள் விஜி. நாட்கள் நகர்ந்தன. பெண் தான் ஒரு வீட்டில் பொறுப்பாக இருப்பாள் என்ற மாயை பிரகாஷ் வீட்டில் உடைந்திருந்தது. பிரகாஷ் பொறுப்பு உள்ளவனாக இருந்தான். விஜி கொஞ்சம் ஊதாரியாக இருந்தாள்.

நாட்கள் நகர்ந்தன. பிரகாஷ் வீட்டில் வளர்த்து வந்த பூனைக்குட்டி மூன்று குட்டிகளை ஈன்று இருந்தது.

‘என்ன இது வீட்டுக்குள்ள போயி குட்டி போட்டு வச்சிருக்கு. கண்ட இடத்தில் எல்லாம் வாய் வைக்குமே. இது எங்கேயாவது விரட்டி விடுங்க’ என்று விஜி சொன்னாள்.

‘ஏன்மா அது நம்மள நம்பித் தான் குட்டி போட்டிருக்கு. எங்க போகும்? அது இருக்கிறவரைக்கும் இருக்கட்டுமே’ என்று பிரகாஷ் பூனைக்கு ஆதரவாகப் பேசினான். பிரகாஷின் பிள்ளைகளும் பூனைக்கு ஆதரவாகவே பேசினர். பால், கறி என்று பூனைக்கு வாங்கிப் போட்டார் பிரகாஷ்.

முதலில் கண்களைக் கூட திறக்க முடியாமல் இருந்த பூனைக்குட்டி பின் மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்க்க ஆரம்பித்தது. எட்டு வைக்கக் கூட முடியாமல் இருந்த அந்தக் குட்டிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தன.

ஆனால் அதற்குள் 2,3 இடங்களுக்கு அந்தப் பூனை தன் குட்டியை வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு எங்கெங்கோ போய் அவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். சாப்பிடும் நேரத்திற்கு மட்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஓடிவிடும். இப்படியாக நாட்கள் நகர்ந்தன.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம். இன்னொரு இடத்திலிருந்து வேறொரு இடம், வேறொரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் என்று பூனைக் குட்டி தன் குட்டிகளை வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அடைக்கலமாய் இருப்பதைப் பார்த்தான் பிரகாஷ். அவனுக்குள் வாழ்வின் பெரிய சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தது பூனை.

என்ன இது, எந்தவிதமான பிடிப்பும் இல்ல. யாராவது சாப்பாடு தருவாங்களா அப்படிங்கிற நம்பிக்கை இல்ல. பூனைக்குட்டி பேருல சொத்துபத்து எதுவுமில்லை. அதைப் பாதுகாக்கிறதுக்கு சொந்தபந்தங்கள் அப்படின்னு யாரும் இல்ல. ஆனா இந்தப் பூனைக்குட்டி தைரியமா மூன்று குட்டிகளைப் போட்டுட்டு அங்கேயும் இங்கேயும் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கு. இந்தப் பூனைக்கு இருக்கிற நம்பிக்கை கூட நமக்கு இல்லையே என்ற பிரகாஷ்

வீடு வாங்கவில்லை; சொத்து சேர்க்கவில்லை என்று நினைத்திருந்த பிரகாசத்தில் சுரீர் என்று உறைத்தது.

அதுமுதல் அவன் வீடு வாங்க வேண்டும், பெரிய வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை கொஞ்சம் சரி செய்தான். உழைக்கலாம், சாப்பிடலாம். இந்த இயற்கை இட்டு வைத்த கட்டளைப்படியே நாம் வாழலாம். நமக்கு எது விதிக்கப்பட்டு இருக்கிறதோ அது கண்டிப்பாகக் கிடைக்கும். எது கிடைக்காமல் போகிறது. அதை தேடினால் அலையக் கூடாது என்ற உண்மை இந்தப் பூனையின் மூலம் அவன் அறிந்து கொண்டான்.

அதற்காக அவன் உதாசீனம் ஆன செலவுகளை செய்வதுமில்லை. ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தன் மாத சம்பளத்தில் இருந்து செய்தான். இப்போதும் வீட்டிற்கான பணத்தை சேமித்து வைக்கிறான். ஆனால் அது அவனுக்குள் வெளியாகவில்லை. அது இயல்பாகவே இருந்தது. நமக்குன்னு இருக்கிறது கண்டிப்பா நம்ம கிட்ட வந்து சேரும். அதுக்காக நம்மள நாமலே குறைச்சுக்கணும்னு அவசியம் இல்லை என்ற பிரகாஷ் மனசிற்குள் அதுமுதல் தென்றல் வீச ஆரம்பித்தது.

முன்பெல்லாம் போர்க்களமாக இருந்த பிரகாசின் மனம் பூனையைப் பார்த்த பிறகு ஒரு பூக்காடாய் மாறியது;.உழைப்போம்…. நமக்கானது கண்டிப்பாகக் கிடைக்கும் என்று உறுதியோடு அனுதினமும் உழைக்க ஆரம்பித்தான். முன்பு போல கஞ்சத்தனம் எதுவும் அவன் செய்வதில்லை.

இப்போதெல்லாம் மனைவி எது கேட்டாலும் வாங்கி கொடுக்கிறான்.

பிள்ளைகளிடம் அவன் கோபம் காட்டுவதில்லை. ஏனென்றால் மூன்று குட்டிகள் போட்ட பூனைக்கு இருப்பிடமும் இல்லை; கையிருப்பும் இல்லை; என்பதை அவனது புத்தி சொல்லியபோது தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தாவிக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.