செய்திகள்

கனவும் நினைவும் – எம்.எஸ். கணேஷ்

Makkal Kural Official

எங்கிருந்தோ சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.

போர்வையை விலக்கி தன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து முகத்துக்கெதிரே காட்டியபடி பார்த்தாள் சத்தியா.

கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6.10 ஆனது. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, பில்டரிலிருந்து டிகாக்சனைப் பார்த்தாள். தனக்குள்ளேயே இது போதும் என முணுமுணுத்துக் கொண்டே காபியை கலந்து குடித்து குளியலுக்குத் தயாரானாள்.

அது முடிந்து சமையலையும் முடித்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி 9.10 ஆனது.

அரக்க பரக்க கைக்கு அடக்கமான டிபன் பாக்ஸில் ஏதோ 3 தோசைகளைப் போட்டாள். அப்புறம் தான் ஞாபகம் வந்தது மிளகாய் பொடி தொட்டுக் கொள்ள வைக்கவில்லையே என்று. அந்த பச்சை மூடி போட்ட டப்பாவை எடுக்கும்போது அவளுக்கு ஞாபகம் வந்தது ; மிளகாய் பொடி தீர்ந்து 2 நாட்களாகி விட்டது என்று.

பக்கத்திலிருந்த சிவப்பு மூடி போட்ட அந்த பூஸ்ட் பாட்டிலை எடுத்தாள். 2 ஸ்பூன் பட்ட மிளகாய்ப் பொடியை எடுத்து பக்கத்திலிருந்த டிபன் பாக்ஸின் மூடியில் போட்டாள். கைப்பக்கமே இருந்த உப்பு பொடியை சிறிது போட்டு நல்லஎண்ணெய்யையும் ஊற்றி அதை அப்படியே ஒடுக்க கரைத்து, அதை டிபன் பாக்ஸிலிருந்த தோசைகளின் மீது தடவி அப்படியே மூடியை மூடி மேலே ஒரு தட்டும் தட்டினாள்.

திரும்பவும் மணியைப் பார்த்தபோது மணி 9.15 ஆகியிருந்தது. இப்போ கிளம்பினால் தான் 9.30க்கு வரும் LIC கட் சர்வீசை பிடிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே அவசர அவசரமாக கையில் கிடைத்த புடவையை எடுத்து சரக் சரக் என கட்டிக் கொண்டாள்.

Wash Basin அருகே சென்று முகத்தை சிறிது துடைத்துக் கொண்டு தனது ஹேண்ட் பேக்கினுள் டிபன் பாக்ஸ்சை திணித்துக் கொண்டாள்.

அதற்குள் மணி 9.17 ஆகிவிட்டது. கடகடவென வீட்டைப் பூட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தாள்.

மனம் மட்டும் ஏன் தான் இந்த பெண் ஜென்மம் எடுத்ததோ என்று தனக்குள் அலறி அடித்துக் கொண்டது. ஆனால் அவளுடைய கால்களோ ஏதோ கீ கொடுத்த பொம்மைப் போல முன்னும் பின்னும் சென்று கொண்டிருந்தது. முண்டக்கன்னியம்மன் கோயில் அருகில் வந்ததும் கீ சற்று குறைந்த பொம்மையைப் போல் சுலோவாகியது. ஆள் காட்டி விரலால் 2 தடவை மோவாய் கட்டையை தட்டிக் கொண்டது. மறுபடியும் கீ கொடுத்துப் பொம்மையைப் போல வேகமாக நடந்தாள்.

கச்சேரி ரோட்டை கடந்து, செங்கழுநீர் விநாயகரைப் பார்த்து ஏதோ மனதுக்குள் முணகிக் கொண்டாள்.

எதிர் திசையில் நிற்கும் பஸ் ஸ்டாப்பை நோக்கி இயந்திர கதியோடு கடக்கும்போது படபட என ஒரு ஆட்டோ ஹாரன் கூட அடிக்காமல் அவளை உரசுகிறாற் போல சென்றது. அப்போது தான் அவளுக்கு சிறிது சுயநினைவு வந்தது. தன்னை சுதாரித்துக் கொண்டு வாயால் அவனை வசை பாடாமல் பஸ் ஸ்டாப் நோக்கிச் சென்றாள்.

சரியாக 9.30 க்கு வந்துவிடும் அந்த LIC கட் சர்வீஸ் அன்றும் சரியாகவே வந்தது. அவ்வளவு கூட்ட நெரிசலிலும் அவள் தன்னுடைய ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பற்றிக் கொண்டு முன் பக்க வழியாக ஒரு வழியாக ஏறி விட்டாள்.

என்றைக்குத்தான் அவளுக்கு உட்கார இடம் கிடைத்தது. அதுபோல தான் இன்றும் நடந்தது. அவளும் எப்போதும் போல அந்த குறுக்குக் கம்பியனுடே ஒடுங்கி நின்று கொண்டாள். டிக்கெட் கொடுப்பதற்காக அந்த கண்டக்டர் சாந்தோமில் நிறுத்தினார்.

அவள் தன் ஹேண்ட் பேக்கின் முன்பக்கம் உள்ள சிறிய அறையிலிருந்து 2 விரல்களால் மட்டும் நுழையுமளவு ஜிப்பை திறந்து, அது எப்படி அவளால் முடிந்ததோ 2 ஒரு ரூபாயும் ஒரு 50 பைசாவையும் எடுத்தாள்.

என்ன மேடம் இன்னிக்கும் இடம் கிடைக்கலையா? என கண்டக்டர் உபசார வார்த்தையாக கேட்க அவளும் எப்போதும் போல ஒரு சிரிப்புடன் ரூபாயையும் பைசாவையும் கண்டக்டரிடம் கொடுத்தாள். கண்டக்டரும் எப்போதும் போல சிகப்பு நிற டிக்கெட்டை கிழித்து அவளிடம் அவனின் 2 விரல்களால் கொடுத்து, உள்ளங்கையில் சில்லறையை வாங்கி, எவ்வளவு என்று எண்ணாமல் கூட தன் பையில் போட்டுக் கொண்டாள்.

ஆல் இந்தியா ரேடியோ ஸ்டாப் வந்ததும் எப்போதும் போல அவளுக்கு உட்கார இடம் கிடைத்தது. அப்பாடி என்ற ஒரு பெருமூச்சுடன் உட்கார்ந்தாள். அந்த காலை நேரத்திலும் பீச்சிலிருந்து வந்த காற்று அவளை சிறிது கண் மூட வைத்தது.

போன மாதம் அவள் வாழ்க்கையில் நடந்த அந்த நிகழ்ச்சி அவளுக்கு கனவு போல நினைவலைகளாக நிழலாடியது.

என்ன ஆச்சு? எவ்வளவு நேரம்? என்று அவள் புலம்ப இந்த மாதிரி லேட்டாகும்னு தெரிஞ்சு தான் நான் உன்னை 5 மணிக்கு எழுந்திரேன்னு சொல்றேன். கேட்டாத் தானே. இப்படி அவதிப் படறயே இது ஏன்? என்று அவளுடைய கணவன் பொரிந்து தள்ளினான்.

ஆனால் அவளோ உங்களுக்கெல்லாம் எங்க எங்களோட கஷ்டம் எல்லாம் புரியப் போகிறது என்று மனதுகுள்ளேயே முணகிக் கொண்டாள்.

எப்ப கேட்டாலும் இத சொல்ல ஆரம்பிச்சிடுறீங்க. சே… சே… ஏன் தான் கல்யாணம் பண்ணின்டோம்னு இருக்கு என்று அவன் புலம்பினான்.

ஆமா நானா வந்து உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்கங்கன்னு, எனக்கு வாழ்வு கொடுங்கன்னு கெஞ்சினேன். எங்க வீட்டுக்கு நடையா நடந்து, எங்கப்பாவை நச்சரிச்சு, உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கலேன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்னு பயமுறுத்தி தான் என்னை கல்யாணம் பண்ணின்டீங்க. ஏன் இப்ப இப்படி பேச மாட்டீங்க என்று பதிலடி கொடுத்து மவுனமானாள்.

இதப் பாரு சந்தியா, எப்பப் பாரு இதையே சொல்லிண்டு இருக்காத. ஏதோ கல்யாணம் பண்ணின்டோம்மா குடும்பம் நடத்திணோமான்னு இருக்ககணும்.

ஆமா நானும் நீங்களும் குடும்பம் நடத்தற லட்சணம் தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே. வெளியிலே சொன்னா வெட்கக் கேடு. நீங்க மேற்கொண்டு கதைய வளக்காமா ஆபிசுக்குப் கிளம்பற வழியைப் பாருங்க. உங்ககிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. அதுக்கு எனக்கு நேரமில்லை.

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி நாலு வீட்டுக்குக் கேக்கற மாதிரி கத்தற என அவன் சங்கு வாய்ஸில் அழுத்தமாக கூறினான்.

அவளும் விடாமல் ஆமாங்க நான் தான் இந்த வீட்ல கத்திப் பேசறேன். ஏப்ப இப்படி பேசறேன்னு உங்களுக்கு புரிஞ்சா நீங்க இப்படியெல்லாம் பேச மாட்டீங்க என்று முகவாய் கட்டையை தோளில் இடித்து கழுத்தையும் சிறிது திருப்பி அசைத்தாள். போதும்…. போதும்…. டெய்லி இதே புராணமா. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நான் என்ன பண்ணப் போறேன்னு அதுக்கப்புறம் தான் என் அருமை உனக்கு புரியும்.

என்ன சும்மா பயமுறுத்தறீங்களா ? நீங்க என்ன பண்ணாலும் சரி… நானு எதுக்கும் பயப்படப் போறதில்லை. இன்னிக்கு நான் உங்களோட ஸ்கூட்டர்ல வர முடியாது. நீங்க ஒண்டியா போய்க்கங்க. எனக்கு இருக்கவே இருக்கு பல்லவன் பஸ்; அதுல போய்குக்குவேன்.

அவள் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னாளோ தெரியலை. அன்று சாயங்காலமே அவளுக்கு வந்த செய்தி அவளை பர்னென்டாக பல்லவனில் செல்லும்படி செய்து விட்டது.

ஆம். அவளுடைய கணவன் ஸ்கூட்டரில் செல்லும்போது பல்லவன் பஸ் இடித்து, ஸ்தலத்திலேயே உயிரும் பிரிந்தது. அந்த செய்தி அவளை அவளது அலுவலகத்தின் எதிரில் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது ஆபீஸ் பியூன் ஓடி வந்து சொன்னது. பஸ் நின்றது: அவளுடைய நினைவான கனவும் கலைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *