சிறுகதை

கனவுக்கு தண்டனை – ஆவடி ரமேஷ்குமார்

காலை மணி பத்து.

காரை எடுக்க வேண்டும். காருக்குள் டிரைவர் சிவாவை காணவில்லை. எங்கே போயிருப்பான் என்று வீட்டைச் சுற்றி தேடினாள் பவித்ரா.

தோட்டத்தில் வாட்ச்மேனுக்காக கட்டப்பட்டிருந்த சின்ன அறையை நோக்கி நடந்தாள். அறையின் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.

அதுவும் தன்னைப் பற்றி சிவாவும் வாட்ச்மேனும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“இல்லண்ணே… நேத்து பவித்ராவை நான் காதலிக்கிற மாதிரி கனவு கண்டேன். ஏன் அவள் என் கனவுல வந்தாள்னு எனக்கு ஒரே குழப்பம்”

“நீ அவளை அதிகமாக ரசிக்கிறே. மனசுல நீ அவளையே நினைச்சிட்டிருக்கிறே. அதான் கனவா வருது”

“ஓ…அப்படியா… ஆனால் எனக்கும் அவளுக்கும் ஏணி வச்சா கூட எட்டாதே. நான் பத்தாம் கிளாஸ் பெயில். அவள் எம்.பி.ஏ. ஒரு தொழில் அதிபரோட மகள். எனக்கு ஏன் இப்படியொரு கனவு வந்தது? அதுவும் நான் அவளுக்கு டிரைவர் ஆச்சே!”

ஜன்னல் வழியாக இதை மறைந்து நின்று கேட்ட பவித்ராவுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. மெதுவாக திரும்பி வீட்டிற்குள் நுழைந்தாள்.

தன் தந்தையின் அறைக்குச் சென்றாள்.

“அப்பா… டிரைவர் சிவாவை உடனே வேலையை விட்டு தூக்குங்க” என்றாள்.

“ஏம்மா என்னாச்சு?”

“நேத்து அவன் கண்ட கனவுல நான் இருந்தேனாம். என்னை அவன் காதலிச்சானாம். இதையை வாட்ச்மேன்கிட்ட சொல்லிட்டிருக்கிறான். அதைக் கேட்ட எனக்கு ஆத்திரம் வருதுப்பா. ஆப்டர் ஆல் ஒரு கார் டிரைவர் கனவுல நானா? என்னை அவன் மனசுக்குள்ள காதலிக்கிறான்ப்பா. உடனே வேலையை விட்டு தூக்குங்க”

“இரும்மா…. இரும்மா……. கனவு கண்டதை தானே வாட்ச்மேன்கிட்ட சொல்லிட்டிருந்தான்.

‘‘உனக்கென்ன லவ் லெட்டரா எழுதி கொடுத்தான்? இல்ல வாயால சொன்னானா? அவசரப்பட்டா அபத்தமாயிடும்மா”

“நோ!” என்று கத்தினாள் பவித்ரா.

“அவனை நீங்க வேலையை விட்டு தூக்கறீங்களா? இல்லே நான் தூக்கட்டுமா?”

“நீயே தூக்கிடும்மா”

வேலையை இழந்த சிவா, “இது ரொம்ப அநியாயங்க. கனவு கண்டது ஒரு குத்தமா? சரி இனிமேல் கனவே காணமாட்டேன். அதை வெளியிலும் சொல்ல மாட்டேன். மன்னிச்சிடுங்க. வேலையை விட்டு போகச் சொல்லாதீங்க மேடம் ப்ளீஸ்!” என்று கெஞ்சி்னான்.

இரக்கம் காட்டவில்லை பவித்ரா.

ஒரு வாரம் சென்றிருக்கும்.

சிவா மீண்டும் வேலை கேட்டு முதலாளி சத்தியமூர்த்தியைப் பார்க்க வந்தான்.

அப்போது வீட்டில் பவித்ரா இல்லை.

“என்னப்பா இது… உன்னைத்தான் என் மகளுக்கு பிடிக்கலையே… அவள் கார்ல போறதுக்குத் தானே உன்னை டிரைவரா அப்பாயின்ட்மென்ட் பண்ணினேன். இப்ப நீ அவளை காதலிக்கிற மாதிரியெல்லாம் கனவு கண்டு குழப்பி வேலையெல்லாம் இழந்திட்டியே… மீண்டும் எப்படி உனக்கு வேலை கொடுக்கிறது?”

“அய்யா… என் வீட்ல எனக்கு பொண்ணு பார்த்துட்டிருக்காங்கய்யா. இந்த சமயத்துல வேலை இழந்திட்டேன். எப்படி எனக்கு பொண்ணு கொடுப்பாங்க. கருணை காட்டுங்கய்யா. பவித்ரா அம்மாவை நான் என் தங்கச்சி மாதிரி நினைச்சு பழகறேன் அய்யா. கனவுக்கு தண்டனை கொடுத்ததை மாத்தி வேலை கொடுங்கய்யா”

சிறிது நேரம் யோசித்த சத்தியமூர்த்தி, “ஓ…உனக்கு பொண்ணு பார்க்கிறாங்களா? ஓ.கே. நீ நாளையிலிருந்து வேலைக்கு வந்திடு” என்றார்.

மறுநாள் வேலைக்கு வந்த சிவாவிடம், “உன்னை யார் இங்கே வேலைக்கு வரச் சொன்னது? மரியாதையா போயிடு” என்று கத்தினாள் பவித்ரா.

“அம்மா… முதலாளி அய்யா தான் என்னை மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு”

“அப்படியா?” என்று கேட்ட பவித்ரா உடனே அப்பாவின் அறைக்கு ஓடினாள்.

“என்னப்பா இது, அந்த சிவாவை ஏன் என்னைக் கேட்காம மீண்டும் வேலைக்கு சேர்த்தீங்க?”

” உஸ்…மெதுவா பேசு. எல்லாம் உன் நண்மைக்கு தான்மா சேர்த்துக்கிட்டேன்”

அவன் என்னை காதலிப்பான்பா!”

“நோ…நோ… அவன் அப்படி இனிமேல் செய்யமாட்டான். அதுக்கு முன்னால ஒரு விஷயம் சொல்றன் கேட்டுக்கோ. நான் நேத்து ஒரு கனவு கண்டேன். அதுல நீ காரோட்டிட்டு போகும் போது வழியில குறுக்கே மறுச்சு அதே கார்ல உன்னை கடத்திட்டு ஒரு காட்டுக்குள்ளே போய் உன்னை சின்னா பின்னப்படுத்திட்டு, ‘ என் கனவுக்கு தண்டணையா வேலையை விட்டு தூக்கிட்டில்ல… இனி நீ உயிரோட இருக்கக்கூடாது’ னு சொல்லி அவன் வச்சிருந்த ஒரு பேனா கத்தியால உன்னை சதக் சதக்னு குத்தறான். நான் அதிர்ச்சியடைந்து முழிச்சிட்டேன். கடவுளே இந்த கனவு பலிச்சிடக் கூடாதுனு தான் நிரபராதியான அவனை நாமே குற்றவாளியாக தூண்டிவிடக் கூடாதுனு வேலைக்கு சேர்த்திட்டேன். இனி அவனுக்கு வீட்ல பொண்ணு பார்த்திட்டிருக்காங்கம்மா. பாவம் விடு. நல்ல பையன். உன்னை தங்கச்சி மாதிரி பார்த்துக்கிறேன்னு எனக்கு வாக்குறுதி கொடுத்திருக்கான்” என்று சத்தியமூர்த்தி கற்பனை கலந்து சொன்னதை கேட்ட பவித்ரா மேற்கொண்டு எதிர்வாதம் செய்யாமல் அமைதியானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *