கதைகள் சிறுகதை

கனவுகள் சில நிஜங்கள்… வத்சலா சிவசாமி

Makkal Kural Official

பார்த்தீபனும் பிரபுவும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.

ஆரம்ப கல்வியில் இருந்தே இருவரும் சேர்ந்தே படித்தார்கள். அவர்கள் படித்த அந்தப் பள்ளி சரித்திரப் புகழ் வாய்ந்தது. தமிழ் மீடியத்தில்தான் இருவரும் படித்தார்கள்.

பள்ளி இறுதித் தேர்வுக்குப் பின் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது பல மாணவர்களோடு சேர்ந்தே ஒரு அறையில் தங்கியிருந்தார்கள். பி.எஸ்ஸியில் படிக்கும்போது கணினியை முதலாம் பாடமாக எடுத்திருந்தார்கள்.

தான் கணினியில் அதிக மதிப்பெண் பெற்று இந்திய ஆட்சிப்பணிக்கு (ஐ.ஏ.எஸ்) முயற்சிக்கப் போவதாக பிரபு அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான்.

பார்த்தீபன் சட்டப் படிப்பு முடித்துவிட்டு அந்தப் படிப்பின் மூலமாக வழக்கறிஞரானதும் பாதிக்கப்பட்ட நிரபாதிகளுக்கு இலவசமாக சேவை செய்ய விரும்புவதாக கூறுவான். அவர்களோடு அறையில் சுமார் பத்து மாணவர்கள் தங்கியிருந்தார்கள்.

அங்குள்ள மற்றொரு மாணவன் தினேஷ் தான் டாக்டராகி பல நோயாளிகளுக்கு உதவி செய்யப்போவதாக கூறுவான்.

மாணவர்களில் இந்த மூன்றுபேர் மட்டுமே ஒரு டீம் போல் காணப்படுவார்கள்.

பிரபுவுக்கு தந்தை இல்லை தாயார் மட்டுமே. அவனுக்கு ஒரு தங்கை உண்டு.

ஊரில் அவனுக்கு ஒரு சொந்தவீடும் கொஞ்சம் நிலங்களும் இருந்தபோதிலும் தாயார் கிராமத்தில் ஏரி தூர் வாரும் பணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மகன் படிப்பு செலவுக்காக அனுப்பி வைப்பாள்.

எழுதப்படிக்கத் தெரியாத தாய்க்கு அவளது மகள் பிரபுவின் தங்கை சுமித்ரா பள்ளியில் படித்துக் கொண்டே உதவியாக இருந்து வந்தாள்.

மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த இளைஞன் என்பதை யாரும் கணிக்க முடியாதபடி நடந்து கொண்டான். அவன் செயல்பாடுகள் அனைத்தும் கம்பீர மாகவும் நாகரீகமாகவும் காணப்பட்டது.

ஊருக்கு சென்றபோது மூவரும் சேர்ந்து செல்வது வழக்கம். அதுபோல் சென்றபோது ஒருமுறை பார்த்தீபனை தனது பழங்கால கிராம வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

தனது தாயிடமும் அறிமுகப்படுத்தினான். தினேஷிடமும் கிராமத்திற்கு சென்ற போது அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறான்.

அச்சமயம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சுமித்ராவும் பார்த்தீபனும் சந்திக்க நேரிட்டது தான் ஒரு விபத்து போலும்.

இருவருமே நிறைய கல்வி குறித்து அறிவியல் விஷயங்களை பரிமாறிக் கொண்டார்கள்.

சட்டப்படிப்பில் உள்ள பல நல்ல அம்சங்களையும் அதனால் சமுதாயத்திற்கு உள்ள பயன்களையும் சிறுமியான அவளிடம் விளக்கினான் பார்த்தீபன்.

தினேஷ் தன் பங்குக்கு மருத்துவர் தொழிலில் உள்ள நலன்களையும் மக்களின் உயிர் காக்க அதில் உள்ள சிறப்புகளையும் ஊருக்கு வரும்போது அவளிடம் பேசிக்கொண்டிருப்பான்.

ஊருக்கு வரும்போது சந்தித்துக் கொள்ளும் மூவரும் சென்னை ஆவடி அருகில் உள்ள காடுவெட்டியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள்.

பள்ளி விடுமுறை நாட்களில் சென்னைக்கு வரும்போது பிரபுவின் தாய் ராஜேஸ்வரியும் பிரபுவின் தங்கை சுமித்ராவும் பிரபுவுடன் காடுவெட்டி அறையில் தங்கியிருக்கும் பிரபுவின் நண்பர்கள் வழக்கறிஞர் கனவில் உள்ள பார்த்தீபனையும் மருத்துவர் நினைவில் வாழும் தினேஷையும் சந்திக்கத் தவறுவதில்லை.

பிரபுவும் அவனுடைய நண்பர்களும் தங்கியுள்ள காடுவெட்டி அறை என்பது ஒரு மிகப் பெரிய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து அனைவரும் ஷேர் ஹோல்டர்களாக மாத வாடகை பங்கினை செலுத்தினார்கள்.

அந்த மிகப் பெரிய வீட்டின் மற்றொரு அறையை வாடகைக்கு பிடித்து பிரபுவின் தாய் ராஜேஸ்வரியும் அவன் தங்கை சுமித்ராவும் தங்கிக் கொள்வது வழக்கம். அப்போது தோட்டத்தில் உள்ள மலர்களை பராமரிப்பது அங்குள்ள செடிகளை தண்ணீர்விட்டு வளர்ப்பது இவற்றில் சுமித்ரா ஆர்வம் செலுத்தினாள்.

சுமித்ரா பார்த்தீபனை அப்போது சந்திக்கத் தவறுவதில்லை. அவள் மரமல்லி, சாமந்தி உள்ளிட்ட தோட்டத்து மலர்களை பறிக்கும்போது பார்த்தீபனும் மலர்களை பறித்துக்கொடுத்து உதவிகள் செய்வான்.

தினேஷிற்கும் அவ்வாறு உதவிகள் செய்வது அவளது கல்வி குறித்த ஐயங்களை எடுத்துக் கூறுவது என அவளுக்கு கல்வியில் ஒத்துழைக்க உதவிகள் செய்தாலும் அவள் அதனை கண்டுகொள்வதில்லை என்றாலும் அவனையும் அவள் நேசித்தாள் என்றேதான் அவன் கருதினான்.

பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற சுமித்ராவுக்கு பார்த்தீபனும் தினேஷும் போட்டிப் போட்டுக் கொண்டு அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களை சொல்லித்தந்தார்கள்.

படிக்காத தாயை பெற்றிருந்த அவளுக்கு அது பெருத்த மகிழ்ச்சியைத் தந்தது.

அதனால் பள்ளி இறுதித் தேர்வில் அவள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநிலத்தின் முதலாவது மாணவியாக தேர்ச்சி பெற்றாள்.

தனது படிப்பின் வெற்றிக்கு அண்ணன் பிரபுவுக்கும் மேலாக அவனது நண்பர்களான பார்த்தீபனுக்கும் தினேஷிற்கும்தான் சுமித்ரா நன்றி தெரிவித்தாள்.

அவள் படித்த பள்ளி மட்டுமின்றி அந்த மாவட்டமும் கிராமமும் அவளை பாராட்டியது, அரசும் அவளை பாராட்டி பரிசுகள் வழங்கியது, அதோடு அண்ணனின் நண்பர்களான பார்த்தீபனும் தினேஷும் தங்களது பங்குக்கு பரிசுகள் வழங்கினார்கள். இதில் சுமித்ரா மகிழ்வின் உச்சத்திற்கு சென்றாள் என்றாலும் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நிகழ்ந்தது.

***

சுமித்ராவின் படிக்காத தாயாரான ராஜேஸ்வரிக்கு மகளுக்கு கிடைத்த திடீர் பாராட்டுகள் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டது.

கிராமத்தின் ஏரி வேலைக்கு செல்வதில்லை, எந்த வித கூலி வேலைக்கும் செல்வதில்லை என்றாலும் தலைவிரிக்கோலமாக கிராமத்தின் ஓட்டு வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தாள்.

வீட்டில் அவளையோ மகளையோ கேட்டபடி யாரேனும் வந்துவிட்டால் வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தாள்.

பெரிதாக சப்தம்போட்டு வந்தவர்களை வெளியேறச் சொன்னாள். ஊருக்கு வரும்போது மகன் பிரபுவிடம் மட்டும் பரிவாகவும் கனிவாகவும் நடந்து கொண்டாள். ஊரில் உள்ள யாருமே ராஜேஸ்வரியின் வீட்டுப்பக்கம் செல்ல பயந்தார்கள்.

இதனிடையே கல்லூரி படிப்பை முடித்த பிரபு அவன் நினைத்தபடி மேற்படிப்பு எதுவும் படிக்க முடியாவிட்டாலும் நட்சத்திர அந்தஸ்திற்கு இணையான ஓரளவு பெரிய ஹோட்டல் ஒன்றில் அவனுக்கு வெயிட்டராக வேலை கிடைத்தது.

பார்த்தீபன் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்து சட்டப்படிப்பைத் தொடங்கியிருந்தான்.

அம்மா ராஜேஸ்வரியின் மனநிலையில் மட்டும் மாற்றம் எதுவும் காணமுடியவில்லை. வீட்டுப்பக்கமும் அந்த திசைப்பக்கமும் யாரும் நெருங்கவே முடியாதபடி இரைச்சலிட்டுக் கொண்டிருந்தாள். ஊருக்குள் வருவதற்கே யாரும் விரும்பாத நிலை காணப்பட்டது.

இதனிடையே பிரபுவின் தங்கையை ஒருதலையாய் நேசித்துக் கொண்டிருந்த தினேஷ் மருத்துவ படிப்பில் இந்தியாவில் இடம் கிடைக்காமல் அவனுக்கு வெளிநாட்டில் இடம் கிடைத்தது. சைக்கியாடிரிஸ்ட் எனப்படும் மனநலம் குறித்த மருத்துவ படிப்பு நிமித்தமாக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டான்.

சில மாதங்களாக பிரபுவிடமும் பார்த்தீபன் மற்றும் நண்பர்களிடம் செல்போனில் வீடியோகாலில் பேசிக் கொண்டிருந்த தினேஷ் திடீரென்று அவனிடமிருந்து தொடர்பு அறுந்தது. யாராலும் அவனை தொடர்பு கொள்ள முடியாதபடி செல்போனின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இவ்விதம் ஆறுமாதம் கடந்திருந்தபோது பிரபுவுக்கு தினேஷிடமிருந்து ஒரு வாட்ஸ் அப் மெசேஜும் தனிப்பட்ட கடிதமும் வந்தது. அதில்,

“நண்பனே என்னை மன்னித்துவிடு, அமெரிக்காவுக்கு படிக்க வந்த எனக்கு இங்கு தங்கிப்படித்த சமயத்தில் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த மாணவி நித்யாவுடன் நட்பும் சினேகமும் ஏற்பட்டது.

நாளடைவில் நாங்கள் நேசித்து விட்டோம். நித்யா அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றவள். அவள் பெற்றோரும் இங்கு வசிக்கிறார்கள். எங்கள் காதலை ஏற்றுக் கொண்டார்கள். நான் படிப்பு முடித்ததும் நித்யாவை திருமணம் செய்து கொள்வேன். இங்கேயே நிரந்தரமாக இருக்கவும் குடியுரிமைக்கு முயன்று வருகின்றேன். இனி நான் இந்தியாவுக்கு வரமாட்டேன். எல்லோரிடமும் தகவல் சொல்லிவிடு. என்னை மன்னிப்பதுடன் மறந்துவிடு நண்பா“ என தினேஷ் கையொப்பமிட்டிருந்தான்.

இதனைக்கண்டு அதிர்வின் உச்சத்துக்குப் போன பிரபு தங்கை சுமித்ராவிடம் தெரிவித்தபோது கண்ணீர் வடித்தாள்.

ஆனால் மனநலம் பாதித்த அம்மாவிடம் கூறியபோது, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். மேலும் சொன்னாள்..“அவன் இங்கிருந்து போனதில் எனக்கு அளவில்லாத சந்தோஷம் தம்பி… தினேஷ் இந்தியாவை விட்டு போகணும்னு தான் நான் அப்படியெல்லாம் நடந்துகிட்டேன்டா பிரபு.. அவனை எனக்கு பிடிக்கல… பார்த்தியை பிடிச்சிருக்கு பார்த்தீபன் தான் உன் தங்கை சுமித்ராவுக்கு பொருத்தமானவன்னு நான் தீர்மானிச்சிட்டேன்.. சுமித்ராவும் அவனைத்தான் விரும்பறா..“

அம்மா சொல்லச் சொல்ல காடுவெட்டி அறையில் தங்கியிருக்கும்போது அதிகமாக பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்ட தினேஷ் சொன்னது நினைவுக்கு வந்தது. “ஒவ்வொரு எழுத்தாளர்கிட்டயும் ஒரு திறமை இருக்கும். அதுபோல பிரபல நாவாலாசிரியர்கள் நாஞ்சில் பி.டி.சாமி, ராஜேஷ்குமார் ரெண்டு எழுத்தாளர்களோட த்ரில் மற்றும் க்ரைம் கதைகளில் ஒரு மேசேஜ் மட்டும்தான் பெரும்பாலும் நிறைஞ்சிருக்கும் பிரபு அது என்ன தெரியுமா? அவங்க கதைகள்ல வர்ற கதாபாத்திரங்கள் யாரையுமே நம்ப முடியாது… எல்லோருமே ரகசிய ரகசியமாக தவறு செய்பவர்கள்தான்… அதைப் புரிஞ்சிகிட்டு அவரவர் தன்னம்பிக்கையோட செயல்படணும் என்பதுதான் அந்த எழுத்தாளர்களின் மெசேஜ், அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பான் தினேஷ்..

அவனது அந்த சொற்கள் அம்மாவின் வடிவில் நிஜங்களாக இப்போது பிரபுவின் மனதில் நிழலாடியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *