தஞ்சாவூர், டிச. 13–
கும்பகோணம் அருகே சுவாமி மலையில் சுவாமிநாத சுவாமி கோவில் திருத்தேரோட்டம் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்காா்த்திகை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நிகழாண்டு திருக்கார்த்திகை நாளான இன்று திருவிழா நடைபெற இருந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக தேர் முழுவதும் நனைந்து காணப்படுகிறது. இதனால் தேரை வடம் பிடித்து இழுத்து வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், மழை லேசாக விட்ட பிறகு சுவாமி அம்பாளை மட்டும் தேரின் உச்சி பீடத்தில் வைத்துவிட்டு இறக்கி விட முடிவு செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.