கோவை, நவ. 6
கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரெயில் சேவை இன்றும் நாளையும் (நவம்பர் 6, 7) ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரியில் கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், குறிப்பாக மேட்டுப்பாளையம் – உதகை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழலும் நிலவியது.
2 நாட்களுக்கு ரத்து
இருந்தாலும், மண் சரிவின் போது, ரெயில் இயக்கப்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரயில் பாதையிலுள்ள மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, சீரமைப்பு பணி முடிவடையும் வரையில் அதாவது 2 நாட்களுக்கு (நவம்பர் 6 மற்றும் 7 ந்தேதிகளில் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.