காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்
சென்னை, அக். 15–
கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு, காங்கிரஸ் நிர்வாகிகள் அரசோடு இணைந்து உதவிகள் செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்திருப்பதால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அக்டோபர் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 31 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மக்களுக்கு உதவ வேண்டும்
காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் மாவட்டங்களில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அவசர உதவி மையத்தின் உதவியை பொதுமக்களுக்கு கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கிய கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுகிறேன்.
களப்பணியில் உள்ள காங்கிரஸ் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கவனமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து, அரசு அதிகாரிகளோடு இணைந்து செயல்பட வேண்டுகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.