தூத்துக்குடி, நவ. 6
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்கார விழாவையொட்டி, சென்னையில் இருந்து 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை 4 மணிக்கு கோவில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த சூரா சம்ஹார விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இப்பொழுதே கோவிலில் குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
2 சிறப்பு ரெயில்கள்
இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06099) செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் சாத்தூர் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
திருச்செந்தூரிலிருந்து நாளை இரவு (7 ந்தேதி) 10.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06100) ஆறுமுகநேரி, நசரத், ஸ்ரீவைகுண்டம், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் கூறியுள்ளது.