பிரதமர் மோடிக்கு நன்றி
கத்தார், பிப்.12–
இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக 8 முன்னாள் கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்தது. கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.
வளைகுடா நாடான கத்தாரில் உளவு பார்த்ததாக 8 இந்திய கடற்படை வீரர்கள், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். தெஹ்ரா குளோபல் என்ற தனியார் கப்பல் நிறுவனம் கத்தாரில் நீர் மூழ்கிக் கப்பல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்நிறுவனத்தில் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றினர். அவர்களில் 8 இந்தியக் கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இவர்கள் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், 3 மாதங்கள் கழித்துதான் அவர்களை இந்திய தூதர் பார்க்க கத்தார் அரசு அனுமதித்தது. கத்தார் நீதிமன்றத்தில் 8 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி கத்தார் நீதிமன்றம் 8 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இந்தியாவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மத்திய அரசு கத்தார் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதோடு மரண தண்டனையை எதிர்த்து இந்திய அரசு தரப்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதோடு மத்திய அரசும் கத்தார் அரசிடம் மரண தண்டனையை ரத்து செய்யும்படி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி 8 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவர்களை விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கத்தார் அரசு 8 பேரையும் தற்போது விடுதலை செய்துள்ளது.
அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களில் 7 பேர் இந்தியாவிற்கு வந்துவிட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கேப்டன் நவ்தேஜ் சிங், கேப்டன் செளரப், கமாண்டர் புர்நேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார், கமாண்டர் சுகுனாகர், கமாண்டர் சஞ்சீவ், கமாண்டர் அமித் நாக்பால், கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா வந்து சேர்ந்த அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்தியா வந்த கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்தியா திரும்ப 18 மாதங்கள் காத்திருந்தோம். எங்களை கத்தார் சிறையில் இருந்து விடுவிக்க முயற்சி எடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இருக்காவிட்டால், இது நடந்திருக்காது.
பிரதமருக்கு கத்தாருடன் இருந்த நல்ல நட்பைப் பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக இந்திய அரசுக்கு மனபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார். மத்திய அரசும், கத்தார் அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது.