நாடும் நடப்பும்

கத்தாரில் கால்பந்து உலக கோப்பை திருவிழா


ஆர். முத்துக்குமார்


உலக விளையாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தரும் மிகப்பெரிய விளையாட்டுகளில் ஒலிம்பிக் போட்டி முதல் இடத்தில் இருப்பதை அறிவோம். அதன் பிரம்மாண்டத்தை கண்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவார்கள். அதற்கு இணையாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இவை பல விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி சாதிக்க வருவார்கள். ஆனால் உலக கோப்பை திருவிழா என்றால் இந்தியர்களுக்கு கிரிக்கெட்! உலகெங்கும் ரசிக்கப்படுவதோ கால்பந்து!

இந்த ஆண்டு முதல்முறையாக கோடைக்கால திருவிழா என்று இருக்கும் கால்பந்துஉலக கோப்பை குளிர்கால திருவிழாவாக மாறி இம்மாதம் 20–ந் தேதி முதல் கத்தாரில் துவங்க இருக்கிறது. ‘பிப்பா’ (FIFA) உலக கோப்பை கால்பந்து ஆட்டங்களுக்காக கத்தார் 220 பில்லியன் டாலர் செலவில் நடத்துகிறார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச சதுரங்க போட்டிகள் சென்னையில் நடந்தது. அதன் செலவில் ஆயிரம் மடங்கு அதிகமாகவே செலவு செய்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த கோலாகல டி20 உலக கோப்பையை விட மிக அதிகம் செலவு செய்து படுநவீனமான வகையில் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து தர இப்படி ஒரு பிரம்மாண்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கமாக உலகக் கோப்பை தொடர் ஜூன், ஜூலையில் நடத்தப்படும். ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

28 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கத்தார், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து நாடுகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமையை பெற உள்ளது கத்தார் போட்டி. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-–ம்ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. எப்படி இருப்பினும் கால்பந்து போட்டிக்காக உலகநாடுகளின் கண்கள் கத்தாரை நோக்கி திரும்பியுள்ளன.

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20–-ம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது. சுமார் ஒரு மாதம் காலம் நடைபெறும் கால்பந்து திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளுக்காக 30 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 லட்சம் ரசிகர்கள் போட்டியை காண்பதற்கு கத்தாருக்கு வந்து குவியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து திருவிழாவை காணவரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

நாளை முதல் கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் கத்தார் உலக கோப்பை கால்பந்து ஆட்டங்களின் சிறப்பையும் போட்டிகளின் பரபரப்பையும் அச்சிட்டு உங்கள் கையில் தவழ இருக்கிறது. செய்திகள், படங்களை விசேஷமாக தர முன்னாள் கால்பந்து வீரர் ஹாட்ரிக் தினாவும் 40 ஆண்டுகளாக விளையாட்டு செய்தியாளர் அனுபவம் பெற்ற ராம்ராஜ் மற்றும் எங்கள் ஆசிரியர் குழுமமும் இதில் உறுதியுடன் செயல்பட்டு விரிவாக விரைவாக தர தயாராகி விட்டோம்.

எங்கள் www.makkalkural.net, www.trinitymirror.net இணையதளங்களிலும் கண்டு ரசிக்க தவறாதீர்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *