சிறுகதை

கதை நாயகன் – ராஜா செல்லமுத்து

முத்துராமலிங்கம் திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சி செய்து கொண்டிருப்பவன். திறமைக்கும் அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. திறமை இருப்பவன் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்றவன் எல்லாம் திறமையாளன் இல்லை. ஏதோ சந்தடி சாக்கில் ஜெயித்து விட்டு போகிறார்கள் திரைத் துறையில்.

முத்துராமலிங்கம் எழுத்தாளர் எதை எழுதினாலும் நெத்தியடியாக எழுதும் எழுத்தாளர். ஆனால் அவன் எழுத்துக்கும் அவன் வாழ்க்கைக்கு ஒற்றுமை இருந்தது எழுத்து வளமாக இருந்தது. வாழ்க்கை நலமாக இருந்தது. வளம் வர வேண்டும் என்றால் அவன் திரைத்துறையில் ஜெயிக்க வேண்டும். பணம் கொழிக்கும் அந்தத் துறையில் முன்னால் போய் நிற்பது என்பது அறிவுக்கு அப்புறப்பட்ட விஷயம். திறமைக்கு தூர இருக்கும் விஷயம்.

அதனால் அவனின் வெற்றி கொஞ்சம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. உதவி இயக்குநராக வேண்டும் என்று நிறைய காலங்கள் எத்தனையோ மனிதர்களை இயக்குநர்களைச் சந்தித்து திரும்பி வந்திருக்கிறான் ஒருவரும் அவனுக்கு உதவி இயக்குநர் வாய்ப்பு தரவில்லை.

தமிழைச் சரியாக எழுதத் தெரியாதவன் எல்லாம் இயக்குனராகி கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் திரைத்துறையில் அவ்வளவு அழகாக எழுதும் முத்துராமலிங்கத்தால் முன்னுக்கு வர முடியாதது கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது.

நீண்ட போராட்டம், நெடிய வேதனை. கொடும் துயரம் இவைகளைத் தாண்டி, ஒரு வழியாக ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநருக்கான வாய்ப்பு முத்துராமலிங்கத்தைத் தேடி வந்தது.

முத்துராமலிங்கத்தை மேலும் கீழும் பார்த்த அந்த இயக்குநர் ‘என்னையா எல்லாரும் படம் எடுக்கிறேன். சினிமா எடுக்கிறேன்னு ஊர்ல இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துடுறீங்க?

நீங்கெல்லாம் சினிமா எடுக்கலன்னு யாரு அழுதா? போய் வேற வேலை ஏதாவது பார்த்து பிழைக்க வேண்டியது தானே? அத விட்டுட்டு சினிமா எடுக்க வந்துடுறானுக.

சினிமா வ பத்தி ஒனக்கு என்ன தெரியும்? அவனவன் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில படிச்சிட்டு வேலை வெட்டி இல்லாமல் அலைஞ்சிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா சினிமா பண்ணனும்னு ஓடி வந்துடுறீங்க? ஒனக்கு என்னய்யா தெரியும்.

இப்ப கூட பாரு குமுதத்தில் ஒரு கதை படிச்சேன். அம்மானு ஒரு கதை. உனக்கு அந்த கதை தெரியுமா ஐயா? என்ன ஒரு அழுத்தமான கதை? என்ன ஒரு அற்புதமான எழுத்து. அப்படி இருக்கணும்யா கதைன்னா உனக்கு என்னய்யா தெரியும்? என்று முத்துராமலிங்கத்தைப் பார்த்துத் திட்டினார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத முத்துராமலிங்கம், சார் நான் ஒன்னு சொல்லவா? என்றான் மெல்லிய குரலில்.

சொல் என்றார் இயக்குநர்.

நீங்க சொன்ன அந்த அம்மா கதைய எழுதினதே நான் தான். அது நான் எழுதின கதை சார். அதைத்தான் நீங்க படிச்சிட்டு இருக்கீங்க என்றான் முத்துராமலிங்கம்.

இயக்குநருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை? அவரின் விழி இரண்டும் பிதுங்கி வெளியே வருவது போல இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *