சிறுகதை

‘‘கதை ஆரம்பம்!’’ | டிக்ரோஸ்

பாகம் –1

––––––––––

கல்லூரி வாழ்வு முடிந்த நாளில் ராஜனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி,

‘எப்போ வேலைக்குப் போகப் போகிறாய்!”, என்பதுதான். இதைக் கேட்டது அவனை ஆறாம் வகுப்பு முதல் வளர்த்த தாய்மாமன் சங்கர் தான்.

அப்பா, அம்மா கார் விபத்தில் இறந்தவுடன் பெற்றோர் இல்லையே என்ற கவலையே இல்லாமல் வளர்த்த பெருமை அவரையே சாரும்.

சங்கரின் மனைவியும் வாயும் வயிறுமாக இருந்த அந்த நேரத்தில் அதே கார் விபத்தில் பலியானாள். சங்கரின் வாழ்வாதாரம் “கலை ஓசை” என்ற மாத இதழ் தான். ராஜனை நன்கு படிக்க வைக்கவும் பிடித்தமான சாப்பாட்டை செய்து போட ஒருவர், மற்றும் இருவரும் நல்ல சட்டை, பேண்ட் போட்டுக்கொள்ள போதிய சம்பாதியத்தை தர தினமும் 12 மணி நேரம் உழைத்தான்.

கல்லூரி வாழ்வை ராஜன் முடித்து விட்டால், தனக்கு துணையாக வந்து விடுவான் என்று காத்திருந்த அந்த நாளும் வந்தது.

“மாமா நீங்க நல்ல நாள் நேரம் குறித்து சொன்னா வந்து விடுகிறேன்” என்றவுடன் சங்கரின் மனம் மகிழ்ச்சியுடன் குதித்தது.

சில நாட்களில் “கலை ஓசை”யின் விளம்பரப்பிரிவு, அச்சுப்பிரிவு விற்பனை கணக்கு வழக்குகளை ஓரளவு புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்தவுடன் சங்கரின் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.

–––––––––––

பாகம் 2

––––––––––

இம்முறை இரண்டு நாட்களுக்கு முன்பே விளம்பரங்கள், கதைகள், கட்டுரைகளை நேரத்தில் வாங்கி வந்து அச்சு பிழைகள் ஏதுமின்றி படுசிறப்பாக வந்து விட்டதால் பிற மாத இதழ்களை எல்லாம் விட இருநாட்கள் முன்பே கடைகளில் விற்பனைக்குச் சென்றுவிட்டதால் விற்பனை அதிகரித்தும் விட்டது.

அந்த ஆண்டு இறுதியில் “கலை ஓசை” தான் மாதாந்திர இதழ்களில் நம்பர் ஒன் என்ற விற்பனை உச்சத்தையும் தொட்டது.

சங்கரின் தனியறையில் ராஜன் அழைத்து வரப்பட்டு பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கையில் “இந்தா உனக்கு போனஸ், அடுத்து ஒரு வாரம் உனக்கு விடுமுறை’ என சங்கர் கூறியவுடன் ராஜனுக்கும் புதிய உற்சாகம் எழுந்தது.

கல்லூரி நாட்களில் கூட ஏன் வீண் செலவு என்று நினைத்து விடுமுறை என்று எந்த ஊருக்கும் சென்றதேயில்லை.

புத்தாண்டு நாளில் இவன் மட்டும் ஏன் இப்படி வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று அவன் மாமாவே பாவப்பட்டே கையில் ரூ.20,000 தந்து விடுமுறைக்குச் சென்று வர கூறினார்.

***

புது சட்டை, பேண்டுகள் எல்லாம் பெட்டி நிறைய இருப்பதால், மேலும் புதிதாக எதுவும் வாங்காமல் இருந்ததை ஒரு சூட்கேசில் எடுத்துக் கொண்டு, பாக்கெட்டில் அந்த ரூ.20 ஆயிரத்தை திணித்துக் கொண்டு வெளியேறினான்.

“எங்கு செல்வது?”

இந்த கேள்விக்கு நல்ல பதில் தரும் நண்பர் என்று கூறிட ஒருவரும் இல்லாத காரணத்தால் அப்படியே கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட நோக்கி சென்றான்.

அங்கு “குளுகுளு” சொகுசு ஏ.சி. பஸ்” ஒன்று பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு தயாராக இருந்தது, அதில் ஏறி அமர்ந்தான்.

அட, இவனும் பாண்டி சென்று குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகப் போகிறானோ? என்ற கவலை வேணடாம், அவன் கண்கள் மகாபலிபுரத்தின் அருகாமையில் சென்று கொண்டு இருந்த போது, ‘உல்லாச ரிசார்ட்’ என்ற அறிவிப்பு பலகையை கண்டவுடன் இங்கேயே தங்கி விட்டால், மேலும் பயணிக்காமல் உடனே விடுமுறையை ஆரம்பிக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது!

மேலும் அந்த அறிவிப்பு பலகையில் குதிரைகள், நீச்சல் குளம் என்ற பல சமாச்சாரங்கள் இருப்பதாக கூறியதாலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட்டு அருகே இருந்த ஆட்டோவில் பெட்டியை ஏற்றி அமர்ந்து கொண்டு, அந்த ரிசாட்டிற்கு சென்றான்.

இரவு சாப்பாட்டை அமர்களமாக முடித்துக் கொண்டு ஏ/சி அறையில் படுக்கச் சென்ற போது அலையின் ஓசை அவனை தூங்க விடாமல் ரம்மியமான கண்ணதாசனின் பாடல் வரிகளை கேட்பது போல் கேட்டுக்கொண்டே விழித்து இருக்க வைத்தது. ஆனால் பின்னிரவில் அசதி மிகுதியால் தூங்கி விட்டான்.

மறுநாள் அதிகாலை வாக்கிங், குதிரை ஏற்றம், நீச்சல் எல்லாம் முடித்த பின், காலை டிபனை ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு ரூமுக்கு திரும்பினான், மணியோ 10.30 தான்!

***

இப்படி நேரம் போகாமல் தவிப்பதற்குப் பதில் எதையாவது எழுதலாமே என சரியாக 11 மணி அளவில் எழுத ஆரம்பித்தான். முதலில் ஒரு சிறுகதை எழுதி முடித்து விட்டு 1.30 மணி அளவில் சாப்பிடச் சென்றான்.

மீண்டும் ஒரு குட்டித் தூக்கத்தை போட்டு விட்டு 4.00 மணி அளவில் ஒரு காபியையும் குடித்து விட்டு, மீண்டும் எதையாவது எழுதலாம் என தொடர்ந்தான். 8.30 மணிக்குள் மேலும் இரண்டு சிறு கதைகள் எழுதியும் முடித்து விட்டான்!

ஆம் முதல் நாளில் இரவு சாப்பாட்டிற்குச் செல்லும் முன் மூன்று சிறு கதைகள், அவை எல்லாமே மாணவ பருவ சம்பவங்களின் சுவாரஸ்யங்கள்.

அடுத்த இரண்டு மாதங்களில் ராஜனின் சிறு கதைகள் “கலை ஓசையின்” வாசகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது!

அதற்கு முன் அவன் வாழ்வில் நடந்த சம்பவங்கள் படு டிரிலிங்கான சமாச்சாரங்கள் ஆகும்!

இரண்டாம் நாள்!

கிட்டத் தட்ட “பிக்பாஸ்” போட்டியாளர் போல் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்பதை புரியாது எதையோ செய்து கொண்டு இருப்பது போல் இருந்தான் ராஜன்.

மூன்றாம் நாளில் தான் டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு நீண்ட நெடிய முழு கதையை எழுத ஆரம்பித்தான் எப்படியும் 20 பாகங்கள் கொண்டுள்ளதாக அமையும் என்று எதிர்பார்த்தான்.

ஒவ்வொரு பாகமும் அதுவரை எழுதிய ஒரு சிறுகதைக்குச் சமமாக இருந்தது, அவற்றில் நவரசங்களில் ஹாசியமும், காதல் சுவையும் தூக்கலாக இருந்ததுடன் விறுவிறுப்பாகவே இருந்தது.

***

_____________

பாகம் 3

–––––––––––-–

முதல் 10 பாகங்களை எழுதிய பிறகு மணியை பார்த்தபோது அது நான்காம் நாள் மாலை 4 மணி என தெரிய வந்தது!

சரி இனிமேல் அறைக்குள் இருந்து எழுதியது போல, வெளியே உள்ள பூங்காவில் இருந்த மரத்தடி நாற்காலியில் ஓய்வாக அமர்ந்த படி எழுத ஆசைப்பட்டான்.

பல பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் இப்படி வீட்டின் பூங்காவில் ஊஞ்சலில் அமர்ந்து மெல்ல அசைந்தபடி எழுதிடும் பழக்கத்தை பற்றி தெரிந்து இருந்ததால் முதல் முறை இப்படி முயற்சிக்க ஆசைப்பட்டான். ஆடிக்கொண்டே எழுதும் முன்பு, அசையாமல் இருக்க – இருக்கும் இருக்கையில் முயற்சித்து பரிசோதனையில் வெற்றி பெற்றால் ஊஞ்சலில் ஆடிய படி எழுதலாம் என்று முடிவு செய்தான்.

அந்த மர இருக்கையில் அமரச் சென்ற போது தான் அங்கே ‘கலை ஓசையின்’ சமீபத்திய மாதப் புத்தகம் இருந்ததைக் கண்டான்!

ராஜனின் பள்ளி கல்லூரி நாட்களில் இப்படி ஏதேனும் கைக்கு கிடைத்தால், அதை சில நிமிடங்களில் யாரும் உரிமை கொண்டாடி வரவில்லை என்றால் அது பார்த்தவருக்கே சொந்தம்!

அந்தச் சட்டத்தை நிலை நாட்டும் முன்பு அதில் எதை எல்லாம் படித்து இருப்பார்கள் என அறிந்து கொள்ள பக்கங்களை புரட்டினான்.

எந்த அறிகுறியும் இல்லை. எந்த மடக்கல் அல்லது குறியீடோ இன்றி லாவகமாக படித்து இருக்க வேண்டும். அல்லது வாங்கியவர் அட்டை படத்தை மட்டும் பார்த்துவிட்டு இப்படி ‘அனாதையாக’ தன்னந்தனியே அப்புத்தகத்தை விட்டுவிட்டுச் சென்று இருக்க வேண்டும்!

25 பக்கங்களுக்குப் பிறகு ஒரு சிறு விசிட்டிங் கார்ட் இருந்தது.

அதில் லலிதா – ஒரு பிரபல ஜடி நிறுவனத்தின் அதிபர் என்ற தகவலுடன் அலுவலக போன் நம்பர்கள் மற்றும் அலுவலக விலாசமும் மட்டுமே இருந்தது.

பெரிய அறிவாளி இப்படி புத்தகத்தை வாங்கி வந்து அங்கு படித்து விட்டு பாதியில் அலுவலகப் பிரச்சனையை தீர்க்க தூள்ளிக் குதித்து ஓடியிருக்கலாம் என ராஜன் யோசித்துக் கொண்டு இருக்கையில் தான் ஒரு நவநாகரீக மங்கை அந்த வனத்தின் நடுவே மெல்லிய தென்றல் காற்று வீசிக் கொண்டிருக்கையில் மெல்ல இவனை நோக்கி நடந்து வந்தாள்!

திரைப்பட பாணியில் கடல் அலைகள் ஒரு கணம் நின்று விட்டதா? என்று கேட்க தோன்றும் மௌனம் அங்கு நிலை கொண்டது.

“மன்னிக்கவும் அந்த புத்தகத்தை திரும்ப கொடுக்க முடியுமா’’ என கேட்க, ‘வேணும்னா 10,000 பிரதிகள் கூட அச்சடித்து தர தயார்! என்று சொல்ல ராஜனின் மனம் ஏங்கியது. ஆனால் ஏனோ வாய் அடைத்து மவுனமானான்.

அவள் புன்னகைத்தபடி அவன் இருக்கை அருகே அமர்ந்தபடி அந்த மாத இதழில் வெளிவந்துள்ள சில சிறப்பு விவரங்களை கூறிய படி, தான் தவறாமல் “கலை ஓசையை” வாங்கிப் படிப்பதாக கூறினாள்.

‘ஏங்க இப்படி வீன் செலவு செய்கிறீர்கள்’ என ராஜன் கேட்டவுடன், ‘நோ, நோ, இதில் உள்ள ஒவ்வொரு கதையும் கட்டுரையும் மிக மிக உபயோகமான வாழ்வியல் சமாச்சாரம் என்று மனம் திறந்து பாராட்டி விட்டு இதை உங்களை போன்றே என் அலுவலக அதிகாரிகளும் கூறுவார்கள். ‘வீணா நேரத்தை வீணடிக்காமல், பொறுப்பா வேலையை செய்’ என்று கூறுவதாக கூறிவிட்டு ‘கல கல’ என சிரித்தபடி விடைபெற்றுச் சென்றாள்.

உன்மையில் மெய் மறந்து 11–ம் பாகத்தை எழுத கை ஓடாமல், ஏதோ நினைவுகளில் மூழ்கி விட்டான்.

அடுத்த வேலையாக ரிசார்ட்டின் வரவேற்பறைக்குச் சென்று அந்த ஐடி நிறுவன உரிமையாளர் லலிதாவின் அறை எது, என வினவ அவர்கள் அது ‘பரம சிதம்பர ரகசியம்’ என்று கூறிவிட்டு எந்த தகவலையும் தர தயாராகவில்லை என்று அறிவித்தும் விட்டனர்.

அங்கு இருந்த உணவகம் மிக ஆடம்பரமானது. இவனே எப்போது இரவு 8.30 மணி சுமாருக்கு மேல் தான் செல்வது வாடிக்கை. ஆனால் இன்று ‘ரகசிய போலீசார்’ திருடர்களை பிடிக்க யோசித்து செயல்படுத்தும் உத்தி போல், அறையில் தங்கியிருக்கும் ஒரு நவநாகரீக மங்கை நிச்சயம் சாப்பிட உணவகம் வருவாள். அதுவும் சீக்கிரம் வந்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பி விடுவாள்’ என்று முடிவு செய்தான்.

அதை பரிச்சித்து பார்க்கவே இன்று உணவகம் திறக்கும் 7 மணிக்கே முதல் ஆளாக உணவகம் சென்று ‘பப்பே’ பகுதியில் அடுப்புகளை பற்ற வைக்கும் காட்சிக்கே சென்று அமர்ந்தான்.

‘சார் குடிக்க ஏதாவது…’ என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ‘சூடான பிறகு உங்க காய்கறி சூப் கொண்டுவா….’ “மெல்ல கொண்டு வந்தா போதும்” என கூறிவிட்டு, கையில் பேனாவுடன் முன் இருந்த வெள்ளை பேப்பர்களில் தன் எண்ணக் கிறுக்கல்களை பதிவு செய்ய ஆரம்பித்தான்.

ஆம், அவனது 11–ம் பாகம் துவங்கப் போவதாகவேில்லை.

மாமா சங்கர் அருகாமையில் இருந்து உசுப்பிவிட்டபடி ‘அச்சுக்கு அனுப்ப நேரமாச்சி, சீக்கிரம் முடித்து விடு’ என்று கூறினால்தான் எழுவதுவான் போல் இருந்தது.

அப்போது கிறுக்கியது கவிதைகள் தான், நீங்கள் படித்த “அழகு, காற்று, இறகு, தேன், பசுமை பூங்கா”… என வசனங்களாக இருக்கிறது என் கூறிவிடுவீர்கள், ஆனால் அந்த வார்த்தைகளால் பின்னப்பட்ட வரிகள் ராஜனுக்கு கவிதையாக இனித்தது!

சுமார் 7.30 மணியளவில் ஒரு பாட்டி மிக நேர்த்தியாக அணிந்திருந்த உடையில் உணவகம் வந்தாள். ஆங்காங்கு மறைவிலிருந்த உணவக பணியாட்கள் திடீரென அவள் முன்தோன்றி ‘வாங்க, வாங்க, அங்கே ஏ/சி நல்லா இருக்கும்..’ என்று ஆலோசனை கூறியபடி அமர வைத்தனர்.

அந்த கால ராஜவம்ச வாரிசாக இருப்பாள் என்று ராஜன் எண்ணிக் கொண்டான்.

ஆனால் அந்த பாட்டியை மறுகணமே மறந்துவிட்டு தனது கவிதை முயற்சியில் மீண்டும் மூழ்கினான்!

சில நிமிடங்களில் புத்தம்புதிதாக மலர்ந்த ரோஜா போல் பளிச்சென்று அங்கு நுழைந்தது அவன் ஆவலுடன் எதிர்பார்த்த லலிதா தான். அவன் எதிர்பார்த்தபடியே நுழைந்து விட்டதால் ஆச்சரியமில்லை என்றாலும் ஏதோ ஒரு ஓட்டல் சிப்பந்தி குளிர்ந்த ‘ஜில்’ தண்ணீரை தெரியாமல் முதுகில் சிந்தி விட்டதுபோல் ஒரு சிலிர்ப்பு ஏற்பட, கண்கள் அகல விரிந்து லலிதாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவளோ ‘விறுவிறு’ வென்று அந்த பாட்டியிடம் சென்று முகம் மலர சிரித்து விட்டு ஏதோ பேசியபடி உடன் அமர்ந்தாள்.

‘அட இவ இளவரசியா? இது ராஜனின் மனதில் ஓடிய எண்ண ஓட்டம். அழகிய ராணி, இப்படி ஒரு ஏழை காதலனை தன் மகளுக்கோ, அல்லது நெருக்கமான உறவு பெண்ணாகவும் இருக்கக் கூடிய லலிதாவிற்கு சம்பந்தம் பேச அனுமதிப்பார்களா?

சில நிமிடங்களில் இவன் முன் சூப் வந்தது. அதில் காரம், உப்பு ஏதும் சரியாக இருந்ததாக தெரியவில்லை. அதில் பாதியை மிச்சம் வைத்துவிட்டு, லலிதா எடுக்கச் சென்ற தக்காளி, வெள்ளரி சாலட் பகுதிக்குச் சென்று அவளுடன் அருகாமையில் நின்றபடி எதை எடுப்பது என நோட்டமிட்டான்.

திரும்பிப் பார்த்த லலிதா, வணக்கம் கூறுவது போல் ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு தன் கடமையில் கண்ணாய் இருந்தாள்.

‘என்ன பசியோ பாவம்’ என்று ராஜன் மனம் சொன்னாலும் ஏதாவது பேச ஆசை வந்தாலும் மவுனமே அங்கு நிலவியது.

‘சுடச்சுட, தோசை வேண்டுமா’ இது ராஜன் கேட்வில்லை. லலிதாவும் கேட்வில்லை. அங்கு பணியிலிருந்தவர் “சுடச்சுட தோசையோ, நான், பரோட்டா வேணும்னா சொல்லுங்க” என இருவரிடமும் பொதுவாக கூறியவுடன், அவள் ‘முறுகலாய் தோசை இரண்டு’ என்று கூறினாள்.

இவனோ ‘நான்’ என்று எந்த அகங்காரமுமின்றி, வாயில் தோன்றியதை மிக மெல்லிய குரலில் கூறினான்.

அங்கிருந்த இட்லியையும் வடபாவ் ஸ்பெஷல், பானிப்பூரியையும் அதற்கு ரசத்தையும் எடுத்துக் கொண்டு அவள் பாட்டியிடம் திரும்பி விட இவனும் எல்லா உணவு வகைகளிலும் சிறிது சிறிதை எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது தான் மன்மதன் அம்பு எய்திட தயாரானான் என்றே குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு தோசையை இவனிடம் வைத்துவிட்டு, ஒரு கூடையில் நானையும் ஒரு தோசையையும் இவன் கண் பார்வையிலேயே இருந்த லலிதா டேபிளுக்கு சென்றது.

மறு நிமிடம், ‘லலிதா சாரி, இது உங்க தோசை, அந்த நான், எனது நான்…’ என்று கூற அந்த டேபிளில் இருந்த இருவருக்குமே அதிர்ச்சி!

‘நான்’ என்று கூறியபடி வாங்க வந்ததில் அப்படி என்ன அதிர்ச்சி என கேட்கலாம்!

பிரச்சனை என்னவென்றால், அவன் லலிதா என மிக அன்பாக தன் நண்பரை அழைப்பது போல் அழைத்ததில் தான் சிக்கலே. அங்கிருந்த லலிதா தான் பாட்டி, ஐடி நிறுவன அதிபர்!

உடனிருந்தது அதாவது ராஜனின் மனதை கவர்ந்த தேவதையோ புவனா லலிதாவின் அந்தரங்க காரியதரிசியாகும்!

உண்மையான லலிதாவிற்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. உடன் இருப்பவர்கள் தனது விசிட்டிங் கார்டையும் தனது செல்வாக்கையும் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதாகும்.

மறு நொடியே ‘ஏய் புவனா, What is happening’ என சற்றே கடுகடுப்புடன் கேட்க‘மேடம் இவரை மாலை நான் ‘கலை ஓசை’ படிக்கும் நேரத்தில் அதன் அடையாளத்திற்கு மட்டும் தான் உங்க விசிட்டிங் கார்டை பயன்படுத்தினான் என கூறியும் உண்மையான லலிதா விடுவதாகயில்லை.

“அது எப்படி நீ எனக்கு காபி கொண்டு வரும் நேரத்தில் உன் போக்கில் மாத இதழ் படித்துக் கொண்டிருக்கிலாம்”, என கேட்டாள். அருகாமையில் இருந்த ஊழியர்கள் எல்லாம் சரிதானே என ஆமோதித்தனர்.

ஆனால் ராஜன் உடனே கூறியது, ‘தப்பு என்னுடையது. மாலையில் உன்னை கண்ட நொடியிலேயே உன்னைக் காதலிக்கிறேன் என் மனதை பறி கொடுத்துவிட்டேன். என்னோடு திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழத் தயாரா? என கேட்டுவிட்டு, நீங்க லலிதா தானே? என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்,’ என தன் மீது கோபப்பட்டுக் கொண்டே அங்கேயே அப்போதே தன் நிலையை அங்கு இருந்தவர்கள் முன்னே விளக்கம் தந்தது விட்டான்.

லலிதாவோ கடுகடுப்புடன், “இந்த உனது ‘நான்’, நீயும் என் முன் உட்காராதே, போய்விடு’ என அங்கேயே புவணாவை பணியில் இருந்து கழற்றி விட்டாள்.

வாடி நின்ற புவனாவை ராஜன் மெல்ல கையை பிடித்து தன் இடத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்தான்.

அதே வேகத்தில் பாய்ந்து சென்று இரண்டாவது தோசையையும் லலிதா சாப்பிட்டு விடும் முன், அங்கு இருந்த தோசையை மீட்டெடுத்து வந்து தன இதயத்தில் ராணியாய் தர்பார் செய்ய ஆரம்பித்துவிட்ட புவனாவிற்கு மண்டியிடாத குறையாக தேசையை பறிமாறிக் கொண்டு இருந்த அவனிடம் “இப்படியே காலம் எல்லாம் எனக்கு பரிமாறி கவனிப்பீர்களா?” என்று கேட்க, அவனும் 12 மணி நேரம் கலை ஓசைக்கு மீதி நேரம் முற்றிலும் உனக்கு, ஆண்டிற்கு 10 நாட்கள் இருவரும் உல்லாசமாக எங்கேனும் சென்று சுற்றுலா பயணம்’ என்று உறுதியும் தந்தும் விட்டான்!

சுபம்!!!

––––––––––

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *