சிறுகதை

கதாநாயகி…. | ராஜா செல்லமுத்து

“தீபாவுக்கு அன்று முழுவதும் மனம் சலனப்பட்டே கிடந்தது.

விரல் சொடுக்கினால் ஓடிவர ஆள் இருக்கிறார்கள். தேவைக்கு மீறிய வசதி. அளவுக்கு அதிகமான புகழ். அவள் நினைத்ததை விட அத்தனையும் அவளுக்கு மிகுதி .

கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என்று எல்லா வுட்களிலும் அவள் பிரபலம். அவளின் முகத்திற்கு முதலீடு செய்யவே ஆட்கள் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள். இத்தனை வருடங்களாய் அவள் மூன்று நான்கு வுட்டுகளைத் தாண்டி முன்னுக்கு வந்திருப்பது அவளின் அயராத உழைப்பு காரணமாய் இருந்தாலும் அவளின் அதிகமான அழகும் இன்னொரு காரணமென்று அவள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும்.

படப்பிடிப்பு இடைவேளையில் இளைப்பாறும் தீபா, தீபா கூப்பிடும் நேரத்தில் சத்தம் கூட வெளியில் செல்லாத அளவுக்கு அவளை மெல்லமாய்க் கூப்பிட்டாள் இன்னொரு நடிகையான ராணி.

“ம்ம்” என்று உதடு திறக்காமலே பதில் சொன்னாள் தீபா

“என்ன இன்னைக்கு மூட் அவுட் போல”

“ஆமா”

“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?

இது எல்லாருக்கும் தெரியப் படுத்திதான் ஆகணும். ஆனா இத வெளியில சொல்லவே ஒரு மாதிரியா இருக்கு ராணி.

ஏன் தீபா இப்படி சொல்ற?

ஆமா என்னோட மூத்த பொண்ணு வயசுக்கு வந்திட்டா .

ஐயோ இது நல்ல விசயம் . இதப் போயி நெனைச்சு கவலைப் பட்டுட்டு இருக்க என்ற ராணியின் வார்த்தைக்கு உடனே பதில் சொன்னாள் தீபா.

உங்களுக்கு வேணும்னா இது நல்ல விசயமா இருக்கலாம் ராணி ;அது எனக்கு தப்பான விசயம் தான்.

என்னென்னு கொஞ்சம் விவரமா சொல்றியா? என்ற ராணி தீபாவின் அருகில் உட்கார்ந்தாள்.

நான் யாரு ராணி?

ம்… நீ கோலிவுட், பாலிவுட் டோலிவுட், மோலிவுட்டுன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒரு சூப்பர் நடிகை

ம் மேல சொல்லு . இன்னைக்கு நீயொரு லேடி சூப்பர்ஸ்டார் என்று தீபாவின் பெருமையை ஒரே மூச்சில் ஒப்பித்தாள் ராணி.

“ம்ம்” நான் லேடி சூப்பர் ஸ்டார் சிறந்த நடிகை. விருது, பட்டங்கள் சொத்து, சுகம் , பேர், புகழ் இது அவ்வளவும் ஒரு ராத்திரியிலேயே வரல ராணி.

அதுக்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் எத்தனை தடைகள். எத்தன அட்சஸ்மெண்ட் யப்பப்பா …. அத நினைச்சாலே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு ராணி. என்னோட கஷ்டம் என்னோடவே போகட்டுமே அது என்னோட மகளுக்கு வர வேணாம்னு நினைக்கிறேன்.

“ஏன்?

“ஏன்னா அப்பிடித்தான்.

என்ன தீபா, நீ எவ்வளவு பெரிய உயரத்தில இருக்க உன்னோட புகழ், சொத்து, மதிப்பு என்ன? அது அத்தனையும் உன்னோட பொண்ணுக்கு கிடைக்க வேணாமா? என்று ராணியும் விடாப்படியாகிப் பேசிக் கொண்டிருந்தாள்.

வேண்டாம். இந்த நாசமாப் போன புகழ், மரியாதை சொத்து எதுவும் எம்பொண்ணுக்கு வேணாம்.

இது சராசரி வாழ்க்கை ராணி. இது வேண்டாம். இந்த இடத்துக்கு வர நான் என்னென்ன பாடுபட்டேன் . இன்னும் என்னென்ன பட்டுட்டு இருக்கேன்னு எனக்குத் தான் தெரியும். என்னோட வீட்டுக்காரருக்கும் எங்க குடும்பத்துக்கும் என்னோட உணர்ச்சிகள் என்னோட சுயமெல்லாம் சுத்தமா கெடையாது. அவங்களுக்கு தேவை பணம் தான். நான் எப்படி நடிச்சா என்ன? எத அவிழ்த்துப் போட்டா என்ன? நான் ரசிகனுக்கு காட்சிப்பொருள் கவர்ச்சிப் பொருளுன்னா, எங்கவீட்டுல நான் சதை முதலீடு.

நான் பேசுற பொம்மை. இது சாகுற வரைக்கும் என்னைய விட்டுப் போகாது . இது ஒரு மாயை. இந்த வலையில நான் சிக்குனது போதும். என்னோட உடம்பையும் உணர்ச்சியையும் அடகு வச்சு, எல்லாத்துக்கும் விருந்து வச்சது போதும். கணவன் மட்டுமே பாக்குற அழகு. ஏக்கத்த தெருவுல போட்டு பந்தி வச்சது போதும் ராணி என்று குமுறிக்குமுறி அழுதாள் தீபா.

அவளை தோளைப் பிடித்து ஆதரவாய்ச் சாய்த்தாள் ராணி.

நீ மட்டும் தான் இதெல்லாம் பட்டது மாதிரி சொல்ற? இது அத்தனையும் நானும் தான் பட்டுருக்கேன் நம்ம மாதிரி இருக்கிற பொம்பளைங்க நிறையபேரு பட்டுருக்காங்க. இது கலைன்னு பெரிய மனுசங்க சொல்றாங்க என்று கடகடவெனச் சிரித்தாள் ராணி.

எல்லாரையும் அப்படிச் சொல்லல… சினிமாவுல பெண்களோட வாடையே பிடிக்காத எல்லாத்தையும் சகோதரியா பாக்குற ஆளுகளும் இருக்கத் தான் செய்றாங்க. எல்லாரையும் நான் தப்பா சொல்லல ராணி. தப்பா நடந்துக்கிற ஆளுகளுக்கு நாம சரின்னு போகலன்னா நம்ம வாழ்க்கை நிர்மூலமாகுது.

இது எல்லாத்தையும் அட்சஸ் பண்ணிப் பண்ணித்தான் என்னோட வாழ்க்கையே இப்படி சீரழிஞ் போச்சு .என்னோட வாழ்க்கை தான் இப்படி ஆகிப் போச்சு. என் பொண்ணோட வாழ்க்கையாவது சரியா இருக்கட்டுமேன்று தான் அவள நடிக்க வேணாம்னு சொல்றேன் ராணி.

இது எப்படி ஆகப் பேகுதோ? என்ன நடக்கப்போகுதோ ? எனக்க பயமா இருக்கு ராணி என்ற தீபா கவலையுற்றாள். கண்ணீர் சிந்தினாள். அவளோடு சேர்ந்து ராணியும் அமுதாள்.

நாட்கள் வாரங்கள் மாதங்கள் நகர்ந்தன.

ஒரு நாள்

ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கமென ஒரு கவர்ச்சி கரமான போஸ்டர் நாளிதழ்களிலும் வலைதளங்களிலும் பவனி வந்தன அந்தக்கவர்ச்சிப் படத்தைப் பார்த்த தீபாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அடிப்பாவி மகளே நான் பெத்த புள்ளையும் இந்த சந்தைக்கு கொண்டு வந்திட்டாளா? இவளோட இளமையும் கவர்ச்சியும் இனிமே இங்க எல்லாருக்கும் பந்தி வைக்கத் தானா? நான் பெத்த புள்ளையும் விலை போனாளே? உன்னைய ஒரு நல்ல குடும்பத்தில கட்டிக்குடுக்கலாம்னு என்ற ஏக்கம் அழுகையை நினைச்சாலே அவளை என்னவோ செய்தது.

அந்தக் கவர்ச்சிப் போஸ்டரில் தன் மகளை இந்தப் படுகுழியில் தள்ளிய தீபாவின் குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே வந்து போயினர்.

எல்லாம் பணம்… பணம்…. பணம்…. மகளின் பிஞ்சு உடம்பில் தெரிந்த கவர்ச்சி தீபாவிற்கு கசப்பாவே இருந்தது.

“நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *