செய்திகள்

கண் பார்வையற்றவரின் கோரிக்கையை ஏற்று வீடு கட்ட ஆணை: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்

திருவண்ணாமலை, செப். 16

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், பத்தியாவரம் சூசை நகர் கிராமத்தில் புனித அமலராக்கினி பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் தங்கி வேலை பார்க்கும் கண் பார்வையற்ற கணேசன் (47) என்பவர் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் (6ந் தேதி) புனித அமலராக்கினி பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டரிடம் தன் குடும்ப நிலையை விளக்கி கூறி இலவச வீட்டு மனை மற்றும் பசுமை வீடு வழங்குமாறு மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டம் மூலம் ரூ. 2 லட்சத்து 100 ஆயிரத்துக்கான பசுமை வீடு கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் இலவச வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று வழங்கியதுடன் வீடு கட்டும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

மேலும் கண்பார்வையற்ற கணேசனின் குழந்தைகளுக்கு பழ வகைகள் மற்றும் புத்தாடைகளை கலெக்டர் வழங்கினார். கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே கண்பார்வையற்றவர் குடும்பத்திற்கு கலெக்டர் நேரில் சென்று மனிதநேயத்துடன் செய்த உதவிகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *