ஒவ்வொரு நிமிடமும் – இடைவேளைக்குப் பின் திக்… திக்…, பக்…பக்…
இனி கோடம்பாக்கம் வட்டாரக் கார்கள் தயாள் பத்மநாபன் இல்லம் நோக்கியே….
தயாள் பத்மநாபன் (அறிமுக இயக்குனர்) இல்லம் நோக்கியே…
இனி படத் தயாரிப்பாளர்கள், இளம் நடிகர்களின்
கார்கள் சர் சர் என்று பறக்கும், இது நடக்கும்!

காரணம், “கொன்றால் பாவம்”- முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் உட்கார்ந்து மணி அடிக்க ஆரம்பித்து விட்டாரே… அப்புறம்?!
பெரிய பேனர், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் பெயர் உச்சரிக்கப்பட்டு, ஒரே நாள் இரவில் அவர் ‘ஓஹோ’ என்று புகழேணியின் படிக் கட்டில் எப்படி ஏற ஆரம்பித்திருக்கிறார்? அதேபோலத்தான் தயாள் பத்மநாபன் விஷயத்திலும் நடக்கப் போகிறது!
கைக்கு அடக்கமான நடிகர்கள், கைக்கு அடக்கமான பட்ஜெட் என்று அவரவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் …தயாள் பத்மநாபனின் புதிய வரவு- சின்னத் தயாரிப்பாளர்கள், சின்னச் சின்ன நடிகர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல தயாள் பத்மநாபன்.
கன்னடத்தில் பதினெட்டு படங்கள், தெலுங்கில் ஒரு படம் இயக்கிய பழுத்த அனுபவ முதிர்ச்சியில்… தமிழில் வலது கால் எடுத்து நுழைந்து இருக்கிறார்.
முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடி இருக்கிறார்.
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலான ஒரு ஆங்கில நாவலின் மையக் கதையை நாடகமாக்கி பின் திரைக்கதையாக்கி, கன்னட (ஆகரலா ராத்திரி) ஆந்திர (அனகனாக ஓ அதிதி) மண்ணில் கண்ட வெற்றியின் எதிரொலியில் தமிழில் “கொன்றால் பாவம்”.
அதிக பட்சம் நாலே நாலு கதாபாத்திரங்கள்: சரத்குமார் வரலட்சுமி, ஈஸ்வரி, சார்லி, நாயகன் சந்தோஷ் பிரதாப். இவர்களோடு 3 கதாபாத்திரங்கள். வட்டிக்குப் பணம் தரும் ஆசாமி, சாராயக்கடை முதலாளி( டைரக்டர் சுப்பிரமணிய சிவா), பலூன் – பொம்மை – புல்லாங்குழல் வியாபாரி விழி இழந்த சென்ராயன்.
“கொன்றால் பாவம்- தின்றால் போச்சு” முதுமொழியின் முதல் இரண்டு வார்த்தையை தலைப்பாக்கி இருக்கிறார், இயக்குனர். கொன்றால் பாவம் என்று தெரிகிறது.தெரிந்தும் கொலை நடக்கிறது. யாரை, எங்கு, எப்படி, எதற்காக, யார் கொலை செய்கிறார்கள் என்பதுதான் மையக்கதை.
கதையைச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும், எதிர்பார்ப்பு எகிறி விடும் என்ற விமர்சன தர்மத்தால்… (உஷ்… பரம ரகசியம்) கதையை காட்சிகளை சொல்லாமல் மையக் கருவை கோடிட்டு காட்டி இருக்கிறேன். (ரசிகன் சொல்வது வேறு)
அதிகபட்சம் 110 நிமிடங்கள் ஓடும் திரைச்சித்திரம். ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டம், கதாபாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் உயிரோட்டம்.
வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி, குடிகாரத் தந்தை சார்லி, நாயகன் (பாசக்கார புள்ள) சந்தோஷ் பிரதீப்: நால்வர் நடிப்பிலும் உயிரோட்டம்.
ஒவ்வொரு நிமிஷமும் அவரவர்கள் முகத்தில் திக் திக், பக் பக், பதட்டம், பதபதைப்பு …ஏன் நமக்கும் தான்?! க்ளைமாக்ஸ், கண் கலங்கும்! (ஒரிஜினல் குடிகாரன் – மொடாக் குடிகாரன் உளறல் எப்படி? சார்லியிடம் பிச்சை வாங்க வேண்டும்)
அய்யய்யோ விபரீதம் நடந்துவிடப் போகிறதே என்று பதற வைக்கும் ஒவ்வொரு காட்சியிலும்… திடீர் திடீர் திருப்பத்திலும் உயிரோட்டம்.
தயாள் பத்மநாபனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஆனந்த கூத்தாடலாம்… அருமை. நகர்த்தப்பட்டு இருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்பட்டிருக்கிறது அவரின் ஆழ்ந்த திறமை.
ஒளிப்பதிவு ஆர் செழியன். இசை சாம் சி எஸ். இருவருமே தயாள் பத்மநானை வெற்றி கோட்டில் நிறுத்தி இருக்கும் அசகாய சூரர்கள்.
பிரதாப் கிருஷ்ணா,மனோஜ் குமார் : தயாரிப்பாளர்கள். வித்தியாச ரசனையில் வெற்றித் தொடர் ஓட்ட ஜோதி யை கையில் பிடித்துக் கொண்டு களத்தில் குதித்து இருக்கிறார்கள்.
கொன்றால் பாவம்:
வரலட்சுமி சரத்குமார்
நடிப்புக்கு தீனி!
குணச்சித்திரத்தில்
நெஞ்சைத் தொடும்
சார்லி, ஈஸ்வரி! தயாளன் பத்மநாபன்
கொடி பறக்குது
வெள்ளித்திரையிலும்,
நம் மனத்திரையிலும்!
வீ. ராம்ஜீ