அறிவியல் அறிவோம்
அதீதமான ஆசைகளால் இயற்கையை மனிதன் அதிகம் சிதைத்து வருகிறான். அதை மீட்டெடுக்கும் பெருமுயற்சியை ஐநா அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. உலகம் முழுவதும் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை மீட்டெடுக்கும் முயற்சியை முன்னெடுக்கும் இளைஞர்களின் பட்டியலை வருடா வருடம் (Young Leaders of Sustainable Development Goals) ஐநா வெளியிட்டு வருகிறது. அந்த இளம் தலைவர்கள் பட்டியலில் டெல்லியைச் சேர்ந்த இளைஞர் உதித் சிங் இடம் பிடித்துள்ளார்.
டெல்லியின் மண்டி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் உதித் சிங்கால் 2019 ஆம் ஆண்டு `glass sand’ கண்ணாடித் துகள்களில் இருந்து மணல் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இதன் மூலம் பழைய கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தி கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணல் உற்பத்தி செய்வதுதான் இவரது திட்டம்.
2018 ஆம் ஆண்டு தன் வீட்டில் குவிந்து கிடக்கும் கண்ணாடி பாட்டில்களைக் கண்டார். பிறகு தனது ஆய்வின் இடையே கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சிக்காக எடுப்பவர்கள் அதன் போக்குவரத்து செலவுகளைக் கணக்கில் கொண்டு அதைச் சேகரிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்கிறார். இவ்வாறான கண்ணாடி பாட்டில்களைச் சேமித்து அதற்கான கிடங்கை அமைத்து அதை மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்பதை உணர்ந்தார். உபயோகமற்று தூக்கி எரியப்படும் ஒரு கண்ணாடி பாட்டில் மண்ணில் கிடந்து சிதைவடைய (Decompose) சராசரியாக பத்து லட்சம் ஆண்டுகள் ஆகும் என்றும் உதித் உணர்ந்தார். ஆகவே, அதற்கான தீர்வை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கினார்.
இந்தியாவிற்கான நியூசிலாந்து தூதரிடம் சிறப்பு மானியம் பெற்று நியூசிலாந்திலிருந்து இயந்திரத்தை வரவழைத்துள்ளார். இந்த இயந்திரம் 5 விநாடிகளில் ஒரு கண்ணாடி பாட்டிலை உயர்தர சிலிக்கா மணலாக மாற்றும் திறனைக் கொண்டது. 65 தன்னார்வலர்கள் 4 அமைப்புகள் துணையோடு டெல்லி முழுவதுமிருந்து பழைய கண்ணாடி பாட்டில்கள் பெறப்பட்டு மொத்தம் 8000 கிலோ பாட்டில்களிலிருந்து 4800 கிலோ உயர்தர சிலிக்கா மணலை இவர் உற்பத்தி செய்திருக்கிறார்.இந்த மணல் உற்பத்தியின் மூலம் கழிவுகளை அகற்றுவது மட்டுமல்லாமல்; நல்ல வருவாய் ஈட்ட முடியுமென்றும் உதித் கூறுகிறார். இந்த சிலிக்கா மணல் கான்கிரீட்டிற்கு அதிக வலு சேர்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.
டெல்லியிலுள்ள பிரிட்டிஷ் ஸ்கூலில் (British School) படித்த இவர், தற்போது லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகக் கல்லூரியில் (University College) மேலாண்மை அறிவியல் (Management Sciences) படித்து வருகிறார். ஐநா வெளியிட்டுள்ள இளைய தலைவர்களான க்ரீன் லிஸ்டில் (Green List) இடம் பெற்றதைப் பற்றி உதித் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவின் பிரதிநிதியாக நான் அறிவிக்கப்பட்டிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
மேலும் இளைஞர்களை வளமான வாழ்வு நோக்கி நகர்த்தும் ஊக்கச் சக்தியாகத் திகழ்வேன் என்றும், நிலையான வாழ்க்கையை (sustainable living) நோக்கி நகர்த்துவதுதான் தனது லட்சியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.