செய்திகள்

கண்டெய்னர் லாரியில் தீ: ரூ. 3 கோடி துணிகள் நாசம்

கிருஷ்ணகிரி, பிப். 7

பர்கூர் அருகே நள்ளிரவில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரிந்ததில் அதில் இருந்த ரூ. 3 கோடி மதிப்பலான 150 பண்டல் துணிகள் கருகி சாம்பலானது.

திருப்பூரில் உள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்திலிருந்து நேற்று (6 ந் தேதி) 150 பண்டில் துணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி டெல்லி நோக்கி புறப்பட்டது. லாரியை, பிஹார் மாநிலம் ரூபீடகா கிராமத்தைச் சேர்ந்த மகபூப் மகன் சவுகின்(27) என்பவர் ஓட்டி சென்றார். லாரி கிருஷ்ணகிரி – குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோவில் அருகிலுள்ள துரை ஏரி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, லாரியின் பின்னால் வந்த மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள், அந்த லாரியில் இருந்து புகை வருவதை கண்டனர். பின்னர், லாரியை முந்திச் சென்று ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து லாரியை ஓட்டிச் சென்ற சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தி பார்த்த போது, கண்டெய்னரில் இருந்து அதிக அளவில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, உதவி அலுவலர் ராமச்சந்திரன், பர்கூர் நிலைய அலுவலர் செங்குட்டுவேலு, கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் வாகனத்தில் இருந்து துணிகள் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கந்திகுப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிரஞ்சீவிகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர் சசிக்குமார் மற்றும் போலீஸார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *